அம்பேத்கர், பெரியார், காமராஜருடன் அண்ணாவையும் படிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை கவுரவித்தார் தளபதி விஜய். சென்னையில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், தனுஷின் அசுரன் பட வசனத்தை பயன்படுத்தினார். விஜய் கூறுகையில், இந்த நிகழ்ச்சியை நான் ஏற்பாடு செய்ய சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் வசனம் தான் காரணம். காடு இருந்தால் எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடுங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது என்கிற அந்த வசனம் என்னை கவர்ந்தது. அது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தமான வசனம். அப்படி முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதனால் தான் என் தரப்பில் ஏதாவது செய்யணும் என்று நினைத்தேன். அதற்கான நேரம் இது. அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து மாணவ, மாணவியர் படிக்க வேணடும் என்றார் விஜய்.
அசுரன் படத்தில் தன் மகனிடம் தனுஷ் பேசிய வசனத்தை விஜய் பயன்படுத்தியதை பார்த்த சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் இது குறித்து அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, சினிமாவில் நாம் சொல்லும் விஷயம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒருவரை அடையும்போது அதனுடைய நேர்மறையான வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பதற்கு இதை ஒரு பெரிய உதாரணமாக பார்க்கிறேன் என்றார்.
அம்பேத்கர், காமராஜர், பெரியார் குறித்து படிக்கச் சொல்லியிருக்கிறாரே விஜய். அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என வெற்றிமாறனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நம் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?. அம்பேத்கர், பெரியார், காமராஜருடன் அண்ணாவையும் படிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றார்.