தமிழக அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய பொன்முடியை அமைச்சரவையில் இருந்து முதல்வர் நீக்குவாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மு.க ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2007-11-ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விழுப்புரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், அனுமதியை மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்படி, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, கவுதம சிகாமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ளதன் மூலம் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், பொன்முடிக்கு எதிரான இந்த வழக்கும் திமுகவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
திமுக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி கொண்டு பொன்முடி கருவூலத்திற்கு 28.4 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி ராஜா, கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல், பூங்கோதை ஆலடி அருணாவும் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். வாரம் ஒரு திமுக அமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்கு வெளியே வந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய பொன்முடியை அமைச்சரவையில் இருந்து முதல்வர் நீக்குவாரா? அல்லது செந்தில் பாலாஜியை போல இவரும் பாதுகாக்கப்படுவாரா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.