பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசுக்கான ஆதரவை முன்னாள் முதல்வர் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா வாபஸ் பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்தது நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம். இதனையடுத்து லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தார் நிதிஷ்குமார். இந்த கூட்டணி அரசுக்கு முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் மாஞ்சியின் மகனும் நிதிஷ்குமார் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவருமான சந்தோஷ் சுமன் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சாவை ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்க்க முயற்சிக்கிறார் நிதிஷ்குமார்; ஆகையால்தான் பதவியை ராஜினாமா செய்தேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கான ஆதரவை ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா வாபஸ் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது தொடர்பாக சந்தோஷ் சுமன் கூறுகையில், நாங்கள் விரைவில் டெல்லி செல்ல இருக்கிறோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய அழைப்பு வந்துள்ளது. இது குறித்து பரிசீலனை செய்ய இருக்கிறோம். மூன்றாவது அணி குறித்தும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் வரும் 23-ந் தேதி நாடு தழுவிய அளவிலான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான ஒருங்கிணைந்த வியூகம் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் நிதிஷ்குமார் அரசுக்கான ஆதரவை மாஞ்சி கட்சி வாபஸ் பெற்றிருப்பது முக்கியத்துவமானதாகவும் பார்க்கப்படுகிறது.