இத்தாலியில் ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து: விஜயகாந்த் வாழ்த்து!

இத்தாலியில் முதன்முறையாக தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை என தேமுக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு நேற்று பிற்பகல் நடைபெற்ற விழாவில் புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார். தமிழகத்திலிருந்து புனிதர் பட்டம் பெறும் முதல் நபர் மறைசாட்சி தேவசகாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வாடிகனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட நிலையில், இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி ஒன்று இத்தாலியின் ரோமில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரும் தமிழகத்தின் பிரதிநிதிகளாக பங்கேற்றனர். இக்காட்சிகளை அங்கு சென்றுள்ள தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்தாலியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்றும் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிவிட்டுள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் இதனை தமிழர்களுக்கு பெருமைக்குரிய தருணம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இத்தாலியில் முதல் முறையாக தமிழ் தாய் வாழ்த்து ஒலித்துள்ளது உலகம் முழுவதும் வாழும் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை என தேமுக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இத்தாலியின் வாடிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தமிழகத்தை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமை பெற்றுள்ளார். தேவசகாயம் இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் பிறந்தது நாம் அனைவருக்கும் கூடுதல் பெருமை. மேலும் இத்தாலியில் முதல் முறையாக தமிழ் தாய் வாழ்த்து ஒலித்துள்ளது. இது உலகம் முழுவதும் வாழும் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை. இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.