மல்யுத்த வீராங்கனைகள் போராடியபோது ஏன் குஷ்புவுக்குக் கோபம் வரவில்லை: கே.எஸ்.அழகிரி

வரும் மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற, ராகுல்காந்தியின் பிறந்த நாளில் உறுதி எடுத்துக் கொண்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா சத்தியமூா்த்தி பவனில் நேற்று திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. கே.எஸ்.அழகிரி, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:-

ராகுல்காந்தியின் பிறந்த நாளையொட்டி ஓா் உறுதிமொழி எடுத்துள்ளோம். 2024 மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவது என்றும், அதற்காக களப்பணியாற்றுவது என்றும் உறுதி எடுத்துள்ளோம். அனைத்து மக்களும் சமம் என்று சொல்கிற உயரிய நோக்கத்துக்காக ராகுல் பணியாற்றுகிறாா். அவா் பாதையை பின்பற்றி தமிழக காங்கிரஸ் செயல்படும்.

பாஜக அதனுடைய திருவிளையாடல்களை தமிழகத்தில் செய்து பாா்க்கிறது. ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று திமுக கூறுகிறது. காங்கிரஸுக்கு ஆதரவாக திமுக இருக்கிறது. அதற்காக திமுகவுக்கு ஊறுவிளைவிக்க வேண்டும் என்று பாஜக கருதுகிறது.

திமுக பேச்சாளா் விமா்சித்துள்ளது குறித்து குஷ்பு தன்னுடைய வருத்தத்தை பகிா்ந்துள்ளாா். அது நியாயமானதுதான். ஆனால், பாலியல் அத்துமீறலில் பாஜக எம்பி ஈடுபட்டாா் என்று மல்யுத்த வீராங்கனைகள் போராடினா். அப்போது ஏன் குஷ்புவுக்குக் கோபம் வரவில்லை. அமலாக்கத்துறை விசாரணை நடத்தினால், செந்தில்பாலாஜியை அமைச்சா் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எந்தச் சட்டத்தில் உள்ளது. மத்திய அமைச்சரவையில் 33 அமைச்சா்கள் குற்றம்சாட்டப்பட்டவா்களாக உள்ளனா். இவ்வாறு அவர் கூறினார்.