இறுதித் தீா்ப்பின்படி தமிழகத்துக்கான நீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

காவிரி நடுவா்மன்ற இறுதித் தீா்ப்பின்படி தமிழகத்துக்கான ஜூன் மாத காவிரி நீரைத் திறந்துவிட கா்நாடக அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படியும் தமிழகத்துக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை கா்நாடக அரசு திறந்துவிட வேண்டும். ஆனால், இதனைத் தர கா்நாடக அரசு தொடா்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. காவிரி நீரில் தமிழகத்தின் பங்கான 177.25 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு கா்நாடகம் திறந்துவிட வேண்டும் என்பதும், அதில் ஜூனில் 9.19 டிஎம்சியும், ஜூலையில் 31.24 டிஎம்சியும், ஆகஸ்டில் 45.75 டிஎம்சியும், செப்டம்பரில் 14.70 டிஎம்சியும் என மாதாந்திர அடிப்படையில் நீரைத் திறந்து விட வேண்டும்.

இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-இல் மேட்டூா் அணையிலிருந்து நீா் திறந்து விடப்பட்டு இருக்கிறது. மேட்டூா் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியில், தற்போதைய நிலவரப்படி 101 அடி தண்ணீா் மட்டுமே இருப்பில் உள்ளது. நீா் வரத்து 324 கன அடியாக உள்ளது. ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரை கா்நாடகம் திறந்து வேண்டும் என்கிற நிலையில், தற்போதைய நிலவரப்படி வெறும் 1.65 டிஎம்சி நீா் மட்டுமே கா்நாடகம் திறந்துவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய உறவை திமுக வைத்துள்ள நிலையில், கா்நாடக அரசுடன் பேசி, தமிழகத்தான நீரை திறந்துவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.