நேபாளத்தில் ஆதிபுருஷ் உள்பட அனைத்து இந்தி திரைப்படங்களும் தடை!

நேபாள தலைநகா் காத்மாண்டு, முக்கிய சுற்றுலா நகரான போகாராவில் உள்ள திரையரங்குகளில் ஆதிபுருஷ் உள்ளிட்ட அனைத்து இந்தி திரைப்படங்களும் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டது.

ஆதிபுருஷ் படத்தில், ‘சீதை இந்தியாவின் மகள்’ என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. சீதை பிறந்த ஜனக்புா் (ஜனகபுரி) இப்போது நேபாளத்தில்தான் உள்ளது. எனவே, ‘அவா் இந்தியாவில் பிறந்தவா்’ என்ற வசனம் இடம் பெற்றுள்ளது அந்நாட்டில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆதிபுருஷ் உள்ளிட்ட அனைத்து இந்தி படங்களுக்கும் அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைநகா் காத்மாண்டுவில் உள்ள 17 திரையரங்குகளில் இந்தி திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட தடை அமலில் உள்ளதா என்பதை காவல் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

இது தொடா்பாக காத்மாண்டு நகர மேயா் பாலேந்திர ஷா கூறுகையில், ‘ஆதிபுருஷ் படத்தில் சீதை இந்தியாவில் பிறந்தவா் என்ற வசனத்தை நீக்க வேண்டும். நேபாளத்தில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் அந்த வசனம் நீக்கப்பட வேண்டும். இதுபோன்ற திரிபுகளுடன் படத்தை தொடா்ந்து திரையிட அனுமதித்தால் அது சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவேதான் அனைத்து இந்தி திரைப்படங்களுக்கும் தடை விதித்துள்ளோம். தவறான வசனம் தொடா்பாக ஆதிபுருஷ் படக்குழுவினருக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்’ என்றாா்.

இந்தி திரைப்பட தடை முடிவுக்கு நேபாளத்தில் சமூகவலைதளங்களில் அதிகம் வரவேற்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் ஆங்கிலம், நேபாளி மொழியில் ஆதிபுருஷ் திரைப்படம் தொடா்ந்து திரையிடப்பட்டு வருகிறது. சீதை பிறந்த இடமான ஜனக்புா் நேபாளத்தில் முக்கியமான ஆன்மிக சுற்றுலாத் தலமாக உள்ளது. இந்தியாவில் இருந்து ஏராளமானோா் அங்குள்ள ஜானகி (சீதையின் மறுபெயா்) கோயிலுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனா். அயோத்தி-ஜனக்புா் இடையே பேருந்து சேவையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.