பாஜகவை எதிர்த்து மாநில கட்சிகளால் போராட முடியாது: ராகுல் காந்தி

ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு எதிராக போராடுவதே எனது லட்சியம். நம்மை போன்று மாநில கட்சிகளால் ஒருபோதும் போராட முடியாது என ராகுல்காந்தி பேசினார்.

நாட்டில் ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மீட்டெடுக்க அக்கட்சியின் மேலிடம் முயன்று வருகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிந்தனையாளர் மாநாடு(சிந்தன் சிர்வீர்) நேற்று முன்தினம் துவங்கியது. இந்த மாநாட்டை சோனியா காந்தி துவங்கி வைத்தார்.

மாநாட்டில் ராகுல்காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்களும், ஜம்மு காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரையிலான காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கட்சியின் சீர்த்திருத்தம், தேர்தல் தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இந்த பரிந்துரைகளின் மீது காங்கிரஸ் காரிய கமிட்டி இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டின் இறுதி நாளான நேற்று ராகுல்காந்தி கட்சியினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சியிலும் இப்படி கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ்ஸில் இத்தகைய நிலை இல்லை. இந்தியா என்பது அனைத்து மாநிலங்களும் இணைந்தது தான். ஒவ்வொரு மாநில மக்களும் இணைந்து தான் மத்திய அரசை உருவாக்குகிறார்கள். ஆனால் தற்போது நாட்டில் கருத்துகள் பகிர்வதற்கான வாய்ப்புகள் இல்லை. காங்கிரஸ் கட்சியில் கருத்து சுதந்திரம் உள்ளது. இதனால் தான் மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் மக்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும். தற்போது இந்த உறவு சிதைந்துள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு குறுக்குவழி எதுவும் இல்லை. கடின உழைப்பு மட்டுமே உள்ளது. அது நமது டிஎன்ஏவில் இருக்கிறது. மக்களிடம் இருந்து தான் காங்கிரஸ் கட்சி உருவானது. இதனால் மீண்டும் மக்கள் மத்தியில் நாம் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு காங்கிரஸ் தலைவர், உறுப்பினர்களுக்கும் நான் ஒன்றை சொல்கிறேன். எதற்கும் நீங்கள் பயப்பட தேவையில்லை. இந்த நாடு உண்மையை நம்புகிறது. எனது மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் உங்களுடன் தான் இருப்பேன். உங்களுடன் சேர்ந்து நானும் போராட வருகிறேன். நமது கட்சி பொறுப்புகளில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். அவர்களை கட்சிப்பணியில் தீவிரமாக செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ஒரு டிக்கெட் என்பதை நாம் ஏற்று கொள்ள வேண்டும்.

நாட்டில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இதன்மூலம் வெறுப்புணர்வு துண்டப்பட்டுள்ளது. நாட்டை தீக்கீரையாக்காமல் நாம் தடுக்க வேண்டும். இதற்கு கட்சியை அடிமட்டத்தில் இருந்து நாம் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். தற்போது அனைத்து இடங்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊடுருவல் உள்ளது. ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு எதிராக போராடுவதே எனது லட்சியம். நம்மை போன்று மாநில கட்சிகளால் ஒருபோதும் போராட முடியாது. நான் யாரிடமும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியது இல்லை. ஊழல் செய்தது இல்லை. இதனால் நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் பயப்பட மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.