மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள குக்கி இனக்குழுவினருக்கு ராணுவத்தின் பாதுகாப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்ற்ம் ஜூலை 3-க்கு ஒத்திவைத்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே மோதல் தொடருகிறது. 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். குக்கி இனக்குழுவினர் மணிப்பூர் மாநிலத்தைவிட்டு வெளியேறி மிசோரம் மற்றும் மியான்மர் எல்லைகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் குக்கி இனக்குழுவினருக்கு இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி மணிப்பூர் பழங்குடிகள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் எனவும் மணிப்பூர் பழங்குடிகள் அமைப்பினர் வலியுறுத்தினர். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதனை ஏற்கவில்லை. மேலும் இவ்வழக்கு விசாரணை ஜூலை 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.