தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையின்போது நெஞ்சு வலி ஏற்பட்டு ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இதய நாளங்களில் மூன்று அடைப்புகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு நாளை காலை பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவின் விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பிறகே முடிவெடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.