தமிழகத்தில் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடப்பதால் தி.மு.க.வை சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மயிலாடுதுறையில் நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழியும், மாற்றுத்திறனாளிகள் 60 பேருக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் 300 பெண்களுக்கு தையல் எந்திரங்களை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-
நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். இதை பொறுக்க முடியாத மத்திய அரசு என்ன செய்வது என்று தெரியாமல் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் அச்சுறுத்தி வருகிறது. நாங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தையே சந்தித்தவர்கள். இதற்கு அச்சப்பட மாட்டோம். அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து நமது முதல்-அமைச்சர் மத்திய அரசை எதிர்ப்பதால் இதுபோன்ற அழுத்தத்தை மோடி அரசு கொடுக்கிறது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனக்கு கொடுத்த வேலையை விட்டுவிட்டு, கொடுக்காத வேலைகளையும் செய்து வருகிறார். தமிழ்நாட்டின் பெயரை கவர்னர் மாற்ற நினைக்கிறார். கவர்னருக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தவர் தான் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். மத்திய அரசு அ.தி.மு.க.வை தங்கள் அடிமை கட்சியாக வைத்துள்ளது. தி.மு.க.வையும் அடிமைப்படுத்த நினைத்தால் அது நடக்காது. என்னை சின்னவர் என்று பட்டப்பெயர் வைத்து அழைக்காதீர்கள். நான் உண்மையாகவே அரசியல் அனுபவம் உள்ளிட்ட அனைத்திலும் சின்னவன்தான். அந்த பட்டப்பெயரை தவிர்த்து விட்டு கலைஞர் வைத்த அழகான உதயநிதி என்ற பெயரை கூறி அழைத்தாலே போதும். இவ்வாறு அவர் பேசினார்.
விழா முடிவடைந்த பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜ.க., தி.மு.க.வை தொடர்ந்து எதிர்ப்பது தி.மு.க. நல்ல பாதையில் போய்க் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். ஒட்டுமொத்த தமிழகமே பா.ஜ.க.வை எதிர்க்கத்தான் செய்யும். எந்த காலத்திலும் பா.ஜ.க.வை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். அமலாக்கத்துறை சோதனையை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு ஜாலியாக போய்க் கொண்டிருப்பதாக பதில் அளித்தார்.