தமிழகத்திலுள்ள 5,362 மதுபானக் கடைகளும் மூடவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 1937 முதல்1971 வரை பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. 71-ல் திமுக ஆட்சியில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. தொடர்ந்து 20 ஆண்டாகவே மதுவிலக்கு அமல், தளர்வு என, மாறி மாறி கொண்டு வரப்பட்டு, தற்போது டாஸ்மாக் என்ற நிறுவனமே மதுக் கொள்முதல், சில்லறை விற்பனையை நடத்துகின்றது. தமிழகத்தில் ஒரு காலத்தில் ஆயிரத்தில் ஒருவர் என்ற நிலை மாறி, தற்போது, சுமா் 60% பேர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட மதுப் பழக்கத்திற்கு ஆளாகி உடல்நிலை பாதிக்கின்றனர். ஆட்டோ ஒட்டுநர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ரூ.20-க்கு தயாராகும் மது 150, 160 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
டாஸ்மாக்கில் மதுபானம் கொள்முதலிலே ஊழல் நடக்கிறது. ஒரு கோடிக்கு மது பாட்டில்கள் வாங்கும்போது 60% என, ரூ.60 லட்சம் பாட்டில்களுக்கு மட்டுமே ஆயத்தீர்வை வரி செலுத்தப்படுகிறது. இதில் ஊழல் நடக்கிறது. இந்தியாவிலேயே தரம் குறைவான மதுபானங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
எங்களது கட்சி சார்பில், ஆகஸ்டு 15-ல் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டு வர வலியுறுத்துவோம். தமிழகத்திலுள்ள 5,362 மதுபானக் கடைகளும் மூடவேண்டும். 500 கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பது மதுவிலக்கின் அம்சம் அல்ல.
2011 முதல் 2016 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அமைச்சர் செந்தில்பாலாஜி ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை பணி நியமன லஞ்சம் பெற்றதாக கொடுத்த வழக்கில் அமலாக்கக் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான தற்போதைய வழக்கில் தப்பித்தாலும், டாஸ்மாக் பார் ஊழல் வழக்கில் முடியாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம், வராமல் போகலாம். அது கவலை இல்லை. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறிய கருத்தை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.