நீட் தேர்வு விலக்கு மசோதா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளிக்கான மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அனுப்பிய நீட் தேர்வு குறித்த கோரிக்கை விண்ணப்பத்தை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கடிதத்தையும் இணைத்து கடந்த ஜனவரி 19-ந் தேதி குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா கடந்த 15 மாதங்களாக ஒப்புதல் அளிக்கப்படாமல் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் லட்சக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதத்துக்கு குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் இருந்து வந்த பதிலில், எனது கடிதம் மேல்நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பிரின்ஸ் கஜேந்திரபாபு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தார். உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள பதிலில், 24.12.2022 தேதியிட்ட தங்களது கோரிக்கை விண்ணப்பத்துடன் இணைத்து கடந்த 19.1.2023 அன்று மதுரை எம்.பி. குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கடிதம், குடியரசுத்தலைவர் அலுவலகம் சுட்டிக்காட்டியபடி, இந்த அமைச்சகத்துக்கு இதுவரை வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. நாட்டின் நிர்வாக தலைமையகமான குடியரசுத்தலைவர் அலுவலகம் எம்.பி.யின் கடிதத்தை மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியதாக கூறுகிறது. ஆனால், உள்துறை அமைச்சகம் அப்படியொரு கடிதம் வரவில்லை என்கிறது. தமிழக மாணவ, மாணவிகளின் எதிர்காலம் குறித்த முக்கியமான விவகாரத்தில் மத்திய அரசு நிர்வாகம் மெத்தனப்போக்குடன் செயல்படுவதையே இந்த பதில் காட்டுகிறது. இதில் கடிதத்துடன் மத்திய அரசு நிர்வாகத்தின் நேர்மையும் காணாமல் போயுள்ளது. எனவே குடியரசுத்தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.