பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!

பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு வர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2023-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின் விருதுகளில் ‘ஆதனின்பொம்மை’ நாவலுக்காக பாலபுரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் திரு.உதயசங்கர் அவர்களுக்கும், ‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்பிற்காக யுவபுரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் திரு.ராம் தங்கம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மிகச் சிறப்பான தமிழ் இலக்கிய படைப்புகளை படைத்து தென் தமிழகத்திலிருந்து விருதிற்கு தேர்வாகியிருக்கும் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “2023 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகடாமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது ‘ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்காக உதய சங்கருக்கு வழங்கப்பட்டு இருப்பதும், யுவ புரஸ்கார் விருது ‘திருக்கார்த்தியல்’ என்ற சிறு கதைக்காக ராம் தங்கத்துக்கு வழங்கப்பட்டு இருப்பதும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். இவர்கள் இருவரும் மேலும் பல விருதுகளை பெற்று, தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்க எனது நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சிறார் இலக்கியத்துக்கான மிக உயரிய விருதான பாலபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் உதயசங்கர், யுவபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் ராம் தங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் “ஆதனின் பொம்மை” என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கர், சிறுவனின் பசியை விவரிக்கும் “திருக்கார்த்தியல்” என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ராம் தங்கம் ஆகியோரை வாழ்த்தி மகிழ்கின்றேன். எழுத்தாளர்கள் இருவரும் தமிழ் சிறார் இலக்கியத்துக்கு தொண்டாற்றும் வகையில் மேலும் பல படைப்புகளை எழுதி தேசிய விருதுகளைப் பெற வேண்டும் என்றும் இந்த நேரத்தில் பெருமிதத்துடன் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.