சந்தேகப் பேர்வழிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: மா. சுப்பிரமணியன்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை முடிந்திருக்கும் நிலையில், அவரை ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்ஷாவுடன் ஒப்பிட்டு நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பியதால், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் டென்ஷனாகி ஆவேசமாக பதிலளித்தார்.

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இதய அறுவை சிகிச்சை நடந்தது. இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியை மையப்படுத்தி பல யூகக் கருத்துகள் சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகின்றன.
குறிப்பாக, 2ஜி முறைகேடு வழக்கில் குற்றவாளியாக ஆ. ராசா அறிவிக்கப்பட்ட போது, அவரது நெருங்கிய நண்பரான சாதிக் பாட்ஷா திடீரென தற்கொலை செய்து கொண்டார். ஆ. ராசா குறித்த அனைத்து விவரங்களும் சாதிக் பாட்ஷாவுக்கு தெரியும் என்பதால் அவர் கொலை செய்யப்பட்டார் என அப்போதைய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இப்போது வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாதிக் பாட்ஷாவை போல செந்தில் பாலாஜியையும் பலி கடா ஆக்கிவிடுவார்கள் என சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நிருபர், “செந்தில் பாலாஜியை சாதிக் பாட்ஷாவுடன் ஒப்பிட்டு சிலர் பேசி வருகிறார்களே..” எனக் கேள்வியெழுப்பினார். இதனால் சட்டென டென்ஷன் ஆன மா. சுப்பிரமணியன், “நீங்கள் எந்த செய்தி நிறுவனத்தைச் சேர்ந்தவர்.. எந்த நிறுவனத்தையும் சேர்ந்தவராக இருங்கள். அது பிரச்சினையில்லை. மற்றவர்களுக்கு சந்தேகம் இருப்பது இருக்கட்டும். உங்களுக்கும் சந்தேகம் இருப்பதால் தான் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள். உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரை அழைத்துச் சென்று, அவருக்கு இதயத்தில் எத்தனை அடைப்புகள் இருந்தன, எப்படி அறுவை சிகிச்சை நடந்தது என்பதை கேட்டு தெரிந்துகொண்டு நீங்களே செய்தி வெளியிடுங்கள். மற்ற சந்தேகப் பேர்வழிகளுக்கு எல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றார்.