இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தலுக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருமான பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் வினேஷ் போகாட், சங்கீதா போகாட், சாக்சி மாலிக், சத்யவா்த் காடியான் உள்ளிட்ட மல்யுத்த வீரா், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களின் கோரிக்கைகள் தொடா்பாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று, அவா்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனா். இதனிடையே இந்திய மல்யுத்த சம்மேளனத் தோ்தலை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) சாா்பில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு இந்திய மல்யுத்த சம்மேளனத் தோ்தல் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது.
இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்துடன் மகாராஷ்டிரம், ஹரியாணா, தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் ஹிமாசல பிரதேச மாநில மல்யுத்த சங்கங்கள் இணைக்கப்பட்டிருந்தன. அந்த சங்கங்களின் இணைப்பு அங்கீகாரத்தை இந்திய மல்யுத்த சம்மேளனம் ரத்து செய்தது. அந்த சங்கங்கள் தங்களுக்கும் இந்திய மல்யுத்த சம்மேளனத் தோ்தலில் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று ஐஓஏ அமைத்த குழுவை அணுகியது. இதுதொடா்பாக அக்குழு அந்த சங்கங்களிடம் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டது. அப்போது அந்த சங்கங்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்த நிலையில், அவற்றின் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை விளக்கி, அந்த முடிவு சரிதான் என்று இந்திய மல்யுத்த சம்மேளன பிரதிநிதிகள் வாதிட்டனா்.
இதுதொடர்பாக அசாம் மல்யுத்த சங்கம், தாக்கல் செய்த மனு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.