இனி வீதி போராட்டம் கிடையாது, சட்ட போராட்டம்தான்: மல்யுத்த வீராங்கனைகள்

பாலியல் புகாருக்கு உள்ளான மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 5 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். இனி நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங் உள்ளார். பாஜக எம்பியான இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இது தொடர்பாக மல்யுத்த வீராங்கைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ் பூஷன் சரண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்றது. மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌சி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா உள்பட ஏராளமானவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எனினும் கூட போலீசார் அவரை கைதுசெய்யவில்லை. மல்யுத்த சம்மேளன தலைவர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய நாடாளுமன்றம் கட்டிட திறப்பு விழாவின்போது நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற வீரர், வீராங்கனைகளை போலீசார் தரதரவென இழுத்து கைது செய்தனர். நாட்டிற்காக விளையாடும் வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டத்தை தீவிரப்படுத்திய மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை எனக்கூறி பதக்கங்களை கங்கையில் வீசுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும் விவசாய சங்க தலைவர்கள் அறிவுறுத்தலால் இந்த போராட்டத்தை வீரர், வீராங்கனைகள் கடைசி நேரத்தில் கைவிட்டனர். இதையடுத்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், இந்த மாதம் முதல் வாரத்தில் மல்யுத்த வீரர் வீராங்கனைகளை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வரும் 15ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக வீரர், வீராங்கனைகள் ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

இதற்கு மத்தியில் பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லி போலீசார் கடந்த 16 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சுமார் 1,500 பக்கங்களை கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் பாலியல் குற்றச்சாட்டு சார்ந்த பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 6 வீராங்கனைகளின் விரிவான வாக்குமூலம், சாட்சிகளின் வாக்குமூலங்களும் அடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதேபோல், மல்யுத்த சம்மேளனத்திற்கு ஜூலை 11 ஆம் தேதி தேர்தல் நடத்தவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த நிலையில், சாலைகளில் நடத்தி வந்த போராட்டத்தை கைவிடுவதாகவும் இனி நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடைபெறும் எனவும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கள் டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு நிறைவேற்றியுள்ளது. எனவே, நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். ஆனால் வீதிகளில் அல்ல… நீதிமன்றத்தில்” என்று பதிவிட்டுள்ளனர்.