இந்திய பிரதமர் மோடி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்த நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 6 நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு நிகழ்வுகளிலும், வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்திலும் கலந்துகொண்டார். அதில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மோடியிடம் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன. அப்போது, பிரதமர் மோடியிடம் அமெரிக்க பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மோடி பதிலளிக்கும்போது, “சாதி, மதம், பாலினம் ஆகிய பாகுபாடுகளுக்கு இந்தியாவில் முற்றிலும் இடமில்லை” என்றார்.
அதே நாளில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இந்திய பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், இந்திய பிரதமர் மோடியுடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், அவரிடம் நீங்கள் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்காவிட்டால் ஒரு கட்டத்தில் இந்தியாவில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பு வலுவாக உள்ளது என்று கூறுவேன் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் செய்தியாளர் சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதிலுக்கு ஆதரவு தெரிவித்தும், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவேன் என்ற ஒபாமாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒபாமாவின் ஆட்சி காலத்தில் ஆறு இஸ்லாமிய நாடுகளின் மீது அமெரிக்கா குண்டு வீசியதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். “பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அமெரிக்க முன்னாள் அதிபர், இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்து பேசுகிறார். இதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் நான் நிதானத்துடன் இதைச் சொல்கிறேன். எங்களுக்கு அமெரிக்காவுடன் நட்பு வேண்டும். ஆனால் அங்கேயும் இந்தியாவில் மத சுதந்திரம் பற்றி கருத்துகள் எழுகின்றன. ஒரு முன்னாள் ஜனாதிபதி, அவரது ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும்ஆறு நாடுகளில் 26,000 க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. அப்படி இருக்கும்போது அவரது குற்றச்சாட்டுகளை மக்கள் எப்படி நம்புவார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், நாட்டின் பிரதமராக மோடிக்கு வழங்கப்பட்ட 13 விருதுகளில், 6 விருதுகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளால் வழங்கப்பட்டுள்ளன. கையில் அடிப்படை தரவுகள் இல்லாமல் வெறும் குற்றச்சாட்டுகளை கூறுவது இவை ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரங்கள் என்று நமக்கு எடுத்துசொல்கிறது. தேர்தலில் பாஜகவையோ அல்லது பிரதமர் மோடியையோ கடந்த சில தேர்தல்களில் எதிர்க்க முடியாது என்பதால்தான், அவர்கள் இதுபோன்ற பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். மேலும் இதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு” என நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.