மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் ராஜினாமா மிரட்டல்!

மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுக கட்சி உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக சார்பில் பூமிநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் தான் மதுரை மாநகராட்சி கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மேயர் இந்திராணி தலைமை வகித்தார். துணை மேயர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்று இருந்தனர். அப்போது ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களின் வார்டுகளில் நிலவும் பிரச்சனைகள் பற்றி பேசி வந்தனர்.

இந்த வேளையில் மதுரை மாநகராட்சி கூட்டத்துக்கு மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் வந்தார். அவருக்கும் கூட்டத்தில் பேச அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பூமிநாதன் எம்எல்ஏ பேசினார். அப்போது அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் பேசுகையில், ‛‛மதுரை தெற்கு தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இதுதொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து பேசி வருகிறேன். ஆனால் பிரச்சனைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தொகுதி பக்கம் என்னால் போக முடியவில்லை. ஏனென்றால் தொகுதிக்கு சென்றால் மக்கள் என்னை முற்றுகையிடுகின்றனர். மக்களுக்கு சேவை செய்யவே எம்எல்ஏவாக இருக்கிறேன். ஆனால் மக்களுக்கு சேவை செய்வதற்கான சூழல் இல்லை. இதனால் நான் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்” என மனம் வருந்தினார்.

மேலும் அவர் கூறுகையில், ‛‛மதுரை மாநகராட்சி பகுதிகளில் எந்த பணிகளுக்கும் நடைபெறவில்லை. ஆள்பற்றாக்குறை நிலவி வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் கூறிவிட்டு எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய போகிறேன்” என பேசிவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் மதுரை மாநகராட்சி கூட்டம் மட்டுமின்றி தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மதுரை மாநகராட்சியில் மதிமுக அங்கம் வகிக்கும் திமுக அதிகாரத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் கூட்டணியில் உள்ள மதிமுக எம்எல்ஏவே மதுரை மாநகராட்சி சார்பில் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் நடக்கவில்லை. மக்கள் தன்னை முற்றுகையிடுகின்றனர் என பேசி ராஜினாமா மிரட்டல் விடுத்து இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.