ஆகமம், பூஜைகளில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கோவில்களில் அர்ச்சகராகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2018-ம் ஆண்டு சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கான புதிய அர்ச்சகர்களை நியமிப்பது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட இந்த அறிவிப்பில், அர்ச்சகர் ஆவதற்கு ஆகம விதிகள் படித்து இருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அறிவிப்புக்கு எதிராக சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கில், கோவில்களுக்கான ஆகம விதிகள் தெரிந்திருந்தாலே போதும். கோவில்களில் அர்ச்சகராக முடியும் என தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ஆகமம் மற்றும் பூஜைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியும் என அதிரடியாக உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.