மணிப்பூரில் அமைதி திரும்ப முதல்வரை நீக்க வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே

மணிப்பூரில் வன்முறை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனில் உடனடியாக அம்மாநில முதலமைச்சரை நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். 55 நாட்களுக்கு பின்னர் மணிப்பூர் நிலவரம் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக ஒரு வியூகத்தை வகுத்தது. அதன்படி, மைத்தேயி/மெய்டெய் எனப்படும் பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இவர்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 53 சதவிகிதமாவார்கள். இந்த வாக்குறுதி பலனளித்தது. பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின்னர் மைத்தேயி/மெய்டெய் மக்கள் பழங்குடி அந்தஸ்து கேட்டு போராட, பழங்குடியினரான குக்கி, நாகா மக்கள் இதற்கு எதிரான போராட்டத்தை தொடங்கினர். கடந்த மே மாதம் 3ம் தேதி தொடங்கிய இந்த போராட்டங்கள் கலவரமாக மாறி தற்போது வரை 100க்கும் அதிமானோரரை பலி கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், நிறுவனங்கள், வாகனங்கள், வழிபாட்டுத்தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
வன்முறையில் பாதிக்கப்பட்ட 47,000 பேர், 372 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வன்முறை மேலும் பரவாமல் தடுக்க 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவம் என 50 ஆயிரம் பேர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாட்கள் மணிப்பூரில் தங்கி நிலைமையை கண்காணித்தார். எனினும், வன்முறை குறைந்தபாடாக இல்லை.

பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளன. அதில் மணிப்பூர் விவகாரத்தில் விரைவில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. காங்கிரஸ், ஜேடி(யு), சிபிஐ, சிபிஎம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி , அகில இந்திய பார்வர்டு பிளாக், தேசியவாத காங்கிரஸ் கட்சி , சிவசேனா (யுபிடி), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த கடிதத்தில், “மாநிலத்திலும், மத்தியிலும் உள்ள அரசால் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மணிப்பூர் முதலமைச்சர்தான் இந்த பிரச்னை உருவாக முக்கிய காரணம். துப்பாக்கிச்சூட்டை உடடினயாக நிறுத்த வேண்டும், அனைத்து குழுக்களும் நிராயுதபாணியாக்கப்பட வேண்டும். எனவே பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” என்று வலியுறுத்தின.

இதேபோல பாஜகவை சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். நிலைமை சீரியஸாவதை உணர்ந்த பிரதமர் மோடி நேற்று மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மணிப்பூர் நிலைமை குறித்து அமித்ஷா, பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி உண்மையில் தீர்வு காண வேண்டும் எனில், உடனடியாக முதலமைச்சர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். மேலும், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அனைத்து கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை மேற்கொண்டு பிரச்னைக்கு பொதுவான தீர்வை காண வேண்டும். இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது, அத்தியாவசிய பொருட்கள்தான். தற்போது போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்துள்ளனர். எனவே அத்தியாவசிய பொருட்கள் உள்ளே வருவது சவாலாக இருக்கிறது. எனவே நெடுஞ்சாலைகளை பாதுகாப்புப் படையினர் மீட்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும்” என மல்லஜகர்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.