பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கும், தமிழக அரசு மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த ஆளுநருக்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் பல்கலையில் பயின்று வந்த இடதுசாரி மாணவர் இயக்கத்தை (SFI) மாநில நிர்வாகி அரவிந்த்சாமியும் இந்த விழாவில் பங்கேற்றிருந்தார். ஆனால் காவல்துறையினர் இவரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று ஆளுநர் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறும் வரை தனியாக அடைத்து வைத்திருக்கின்றனர். இது மாணவர்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியாக ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் காவல்துறை தொடர்ந்து கறார் தன்மையை காட்டி வருகிறது.
இந்நிலையில் நாளை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் கறுப்பு உடையை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், “பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறவிருக்கிறது. பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கும் அனைவரும் கறுப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்துவர வேண்டும். அதே சமயம் கைப்பேசிகள் எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் சேலம் மாவட்டக் காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது” என பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கையில், தனக்கு எதுவும் தெரியாது என்றும், “சேலம் மாநகரக் காவல் ஆணையர் பல்கலைக்கழகத்தை வந்து பார்வையிட்டுவிட்டு இதுபோன்று அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கூறினார். எனவேதான் இப்படி அறிக்கை வெளியிடப்பட்டது” என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில், “ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென்று சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார். தற்போது இந்த டுவீட் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.