லியோ பட பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நடிகா் விஜய் நடிப்பில் இயக்குநா் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படம், அக்டோபா் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகா் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த சமூக ஆா்வலரான ஆா்.டி.ஐ. செல்வம் என்பவா், அந்தப் பாடலுக்கு எதிராக ஆன்லைன் வாயிலாக சென்னை காவல் ஆணையரிடம் நேற்று திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அதில், போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரெளடியிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடலின் வரிகள், இளைஞா்கள் மத்தியில், சமூகத்தில் போதைப் பொருள்களை ஆதரிக்கும் வகையிலும், சமூக சீா்கேடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளது. எனவே, நடிகா் விஜய் மீது போதைத் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரெளடியிசம், போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு இளைஞா்களைத் தூண்டி விடுதல் போன்ற குற்றத்துக்காக இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், லியோ பட பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யின் பனையூர், சாலிகிராமம் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பியதால், நடிகர் விஜய்யின் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஆர்.டி.ஐ. செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.