ஒரு கும்பலை கட்சியாக மாற்றுவது முடியாத காரியம்: குருமூர்த்தி

நடிகர் விஜய் பற்றி எனக்கு தெரியாது. ஒரு கும்பலை கட்சியாக மாற்றுவது முடியாத காரியம் என்று, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறினார்.

நடிகர் விஜய் அண்மையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலிலும் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில், “மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜ் ஆகியோரை படிக்க வேண்டும்” என அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியும், அவரது பேச்சும் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை அப்பட்டமாக தெரிவிப்பதாக இருந்தது. இதனிடையே, விஜய் அரசியலுக்கு வருவதை திருமாவளவனும், சீமானும் கடுமையான சொற்களால் விமர்சித்தனர். “சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் சாபக்கேடு” என திருமாவளவன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், விஜய் ரசிகர்களும் இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றினர்..

இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்த ‘ Ajay to yogi adithyanath’ என்ற புத்தகத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கலந்து கொண்டார். பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய குருமூர்த்தி கூறியதாவது:-

நான் எப்பவுமே, வாழும் மனிதர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில்லை. ஆனால், யோகி ஆதித்யநாத் அப்படியில்லை.. அவர் அசாதாரணமான மனிதர்.. வெறும் அரசியல்வாதி மட்டுமே கிடையாது.. உத்தரபிரதேசத்தில் அவர் செய்த சாதனைகள் அனைத்துமே, அவரது சொந்த குண நலனால் செய்தவையாகும். ஆனால், ஜீவானந்தம் போன்ற உயர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்களை பற்றி போதுமான புத்தகங்கள் வெளிவரவில்லை.. அவர் சார்ந்த கட்சி கூட அவரை பற்றின புத்தகத்தை வெளியிடவில்லையே.. எல்லா கட்சியிலும் நல்ல மனிதர்கள் இருப்பார்கள். அனைவரும் ஏற்கும் கருத்தை பெரியார் சொல்லவில்லை. தமிழை காட்டுமிராண்டி மொழி என்பதுபோல், பெரும்பாலானோர் எதிர்க்கும் கருத்து போலவே கூறியிருக்கிறார்” என்றார் குருமூர்த்தி.

செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக திமுக தலைமை வைத்துள்ளதே என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினார்கள். அதற்கு குருமூர்த்தி, “போதுமான மெஜாரிட்டி திமுகவுக்கு இருக்கிறது.. அதனால், இலாகா இல்லாத 4 அமைச்சர்களை கூட வைத்துக்கொள்ளலாம். சட்டப்படி அதற்கு வாய்ப்பும் உண்டு. ஆனால், அது சரியா? இல்லையா? என்பதை மக்களும், திமுக கட்சியும்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

“நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கிறீர்கள்.. நடிகர் விஜய் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.. முதல்ல சினிமா பற்றியே எனக்கு தெரியாது.. ஆனால், தமிழ்நாட்டில் இனி சினிமாவில் இருந்து வந்து யாரும் வெற்றியடைய முடியாது என்று நான் நினைக்கிறேன். 30 வருடங்கள் எம்ஜிஆரின் ரசிகர் மன்றம் திமுகவில் இருந்தது.. அதனால், திமுகவிற்குள்ளேயே அதிமுக இருந்தது.. அதனால்தான் எம்ஜிஆரால் வெற்றி பெறவும் முடிந்தது. ஆனால் கும்பலை கட்சியாக மாற்ற முடியாது.. ரஜினிக்கும் இதே பிரச்சனைதான் ஏற்பட்டது. ரசிகர் கூட்டத்தை அமைப்பாகவோ, கட்சியாகவோ மாற்ற முடியாது. நடிகர்கள் அரசியலுக்கு வந்து வெற்றி பெறுவதற்கான முயற்சி பெரியளவில் இனி வெற்றி பெறாது. ஒரு கட்சி உருவாகி, மக்கள் மத்தியில் முன்னேறி வர, எப்படியும் 20 வருடங்கள் ஆகும். 10 கட்சிகள் இணைந்தே கூட்டணி அமைக்க திணறி வரும் போது, 10 லட்சம் பேர் சேர்ந்து ஒரு கட்சியாக உருவாவது எவ்வளவு பெரிய கஷ்டம்? எனவே, இந்த முயற்சி எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையாது. இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.