மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கும்போது காயமடைந்த நிலையில், அவர் விரைந்து நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி. பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்று மதியம் கொல்கத்தா திரும்புவதற்காக ஹெலிகாப்டரில் பாக்டோக்ரா சென்றார் மம்தா பானர்ஜி. ஜல்பைகுரியில் இருந்து கொல்கத்தா செல்வதற்காக பாக்டோக்ரா நோக்கி ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது, கனமழை பெய்ததால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பைகுந்தபூர் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது, மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிலிகுரி அருகே உள்ள செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதும் மம்தா பானர்ஜி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மம்தா பானர்ஜியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இடது முழங்கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டில் இருந்தபடியே அவர் சிகிச்சை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மம்தா பானர்ஜியின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டு கவலையடைந்தேன். ஹெலிகாப்டர் திடீரென அவசரமாக தரையிறங்கியதில் காயம் அடைந்த மம்தா பானர்ஜி, விரைவில் குணமடையவும், விரைவில் நலமுடன் திரும்பி வரவும் விரும்புகிறேன்” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.