பைபாஸ் சர்ஜரிக்கு 20 நாட்கள் கண் விழிக்க முடியாது என்பது வினோதமாக இருப்பதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியிருந்தார். இதையடுத்து அவரை அமலாக்கத் துறையினர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு இதயத்தில் 4 இடங்களில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மருத்துவமனைக்கே சென்று செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த வழக்கின்படி அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத் துறை அனுமதி கேட்டது. ஆனால் நீதிமன்றமோ அவருடைய சிகிச்சைக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாதவாறு அவரை 8 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி அளித்தது.
ஆனால் ஒவ்வொரு முறையும் அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த செல்லும் போது அவருக்கு ஏதாவது சிகிச்சை அளிக்கப்பட்டுக்கொண்டே இருந்ததால் அமலாக்கத் துறையினர் விசாரிக்க இயலவில்லை. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. முதலில் ஐசியூவில் செயற்கை சுவாசத்தில் இருந்த செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டார் என்றும் அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. செந்தில் பாலாஜிக்கு 20 நாட்கள் மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுவதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்தது.
இந்த நிலையில்தான் பைபாஸ் சர்ஜரிக்கு 20 நாட்கள் கண் முழிக்க முடியாது என்பது வினோதமாக இருப்பதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எச்.ராஜா கூறியதாவது:-
சந்தேகங்களுக்கு இடம் அளிக்கும் வகையில் செந்தில் பாலாஜி உடல் நலம் உள்ளது. பைபாஸ் சர்ஜரிக்கு 20 நாட்கள் ஆனாலும் கண் விழிக்க மாட்டார்கள் என்பதை எல்லாம் நான் வாழ்க்கையில் கேள்வி படவில்லை. பல உதாரணங்கள் உள்ளது. ஆபரேஷன் பண்ணுறத காட்டுங்கள் என யாராவது உங்களிடம் கேட்டார்களா? இல்லயே, படுத்து தான் இருக்கிறார்.. விஷுவலை காட்டுங்கள். நீங்க கேட்டீர்களே.. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நீங்கள் ஏன் காட்டவில்லை என்று கேட்டீர்கள். இதே ஸ்டாலின் வாய் கேட்டது. நீங்கள் கேட்டதை செய்ய வேண்டாமா?. இவ்வாறு அவர் கூறினார்.