பிரதமர் மோடி வரலாற்றை தெரிந்துகொண்டு பேச வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஆளும் கட்சியாக இருந்தாலும், நல்லதை செய்ய கூட இன்றைய காலத்தில் பயப்பட வேண்டியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நல்லதை கூட பொறுமையாக, கவனமாக, நிதானமாக, அச்சத்துடன் செய்ய வேண்டியுள்ளது என்றும் திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கும்மிடிப்பூண்டி வேணு அவர்களின் இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர், மணமக்களை வாழ்த்திய அதே நேரத்தில் அரசியலும் பேசினார். அவர் பேசியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் வீரராக திகழ்ந்தவர் வேணு. உடல் நிலை சரியில்லாத நேரத்தில் கூட அறிவாலத்திற்கு வருவார் வேணு. அவரை நான் உரிமையோடு கடிந்து கொள்வேன். உடலை நலனை பார்க்காமல் திமுகவிற்கு தொண்டாற்றுவார் வேணு. இந்த விழாவின் தலைமை பொறுப்பேற்று நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். கும்மிடிப்பூண்டி தொகுதி மக்களுக்கு பல்வேறு பணியாற்றியுள்ளார் வேணு. திமுக நடத்திய அனைத்து போராட்டங்களிலும் ஈடுபடுத்திக்கொண்டவர் வேணு. நெருக்கடி நிலை காலத்தில் திமுக ஆட்சியை கலைத்து விட்டு 500க்கும் மேற்பட்டவர்களை சிறையில் அடைத்தனர். சென்னை சிறைச்சாலையில் நானும், டி.ஆர் பாலுவும் அடைக்கப்பட்டிருந்த போது நம்மோடு இருந்தவர்தான் வேணு. அப்படி தியாக சீலர் வேணுவின் பேத்திக்கு மண விழா நடைபெறுகிறது.

மணமக்கள் உங்களுக்கு பிறக்கின்றன பிள்ளைகளுக்கு அன்பான தமிழ் பெயரை சூட்டுங்கள். வீட்டிற்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டர்களாய் வாழுங்கள். திருமணம் நடைபெற்றதில் நான் வேணுவை விட 2 நாட்கள் சீனியர். ஓராண்டு காலம் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருந்த போது என்னுடைய முதலாண்டு திருமண நாளையும் வேணு தனது முதலாண்டு திருமண நாளையும் சிறையில்தான் கொண்டாடினோம். இதெல்லாம் வரலாறு. இந்த வரலாறு சிலருக்கு ஏன் நமது பிரதமருக்கு கூட தெரியவில்லை.

ஆளுங்கட்சியாக இருப்பதால் நல்லதைக் கூட ஜாக்கிரதையாக, பொறுமையாக, நிதானமாக செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளோம். எதிர்கட்சியாக இருந்த போது கெட்டதை கூட தைரியாக செய்ய முடிந்தது இன்றைக்கு அப்படி இல்லை.

நாட்டின் பிரதமராக உள்ள நரேந்திர மோடிக்கு வரலாறு தெரியவில்லை. திமுகவுக்கு வாக்களித்தால் கலைஞரின் குடும்பம்தான் பயனடையும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழ்நாடும், தமிழ் மக்களும்தான் கலைஞரின் குடும்பம். திமுகவினர் குடும்பம் குடும்பமாக போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றிருக்கிறோம். ஒட்டுமொத்த திமுகவினரையும் தனது மகனாக நினைத்தவர் கலைஞர். திமுக என்பது குடும்பம் தான்; கட்சியினரை தம்பி என அழைத்தவர் அண்ணா. பிரதமர் மோடி வரலாற்றை தெரிந்துகொண்டு பேச வேண்டும்.

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தால் பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளார். பாஜகவுக்கு எதிரான கட்சிகளை திரட்டி கூட்டணி அமைப்பதற்காக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டில் கூட்டம் நடந்தது. அச்சத்தின் காரணமாகவே பிரதமர் மோடி இறங்கி வந்து பேசுகிறார். பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் 50 நாட்களுக்கும் மேலாக வன்முறை நீடிக்கிறது. ஆயிரக்கணக்கானோர் மணிப்பூரைவிட்டு வெளியேறி உள்ளனர். மணிப்பூர் பக்கமே இதுவரை பிரதமர் மோடி செல்லவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட 50 நாட்களுக்கு பிறகே அமித் ஷா நடத்தியுள்ளார்; இதுவே பாஜக ஆட்சியின் லட்சணம்.

மணிப்பூரை கண்டுகொள்ளாத பிரதமர் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பேசுகிறார். மதப்பிரச்சனையை அதிகமாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெறலாம் என நினைக்கிறார் பிரதமர் மோடி. நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மத்தியில் நமக்காக பாடுபடும் மதச்சார்பற்ற, சிறப்பான ஆட்சியை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். எப்படி தமிழகத்தில் நமது ஆட்சி உருவானதோ, அதே போல் மத்தியில், மதச்சார்பற்ற ஆட்சி, மாநில உரிமைகளை வழங்கும் ஆட்சி உருவாக வேண்டும். அதற்கு நீங்கள் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.