பீம் ஆர்மி தலைவர் மீதான தாக்குதளுக்கு பா.ரஞ்சித் கண்டனம்!

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீதான கொலைவெறித் தாக்குதல் என்பது ஓர் அப்பட்டமான சாதியக் குற்றம் என்று இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் தியோபந்த் நகரில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் நேற்று (ஜூன் 28) மாலை காரில் சென்றபோது வேறு காரில் சென்ற மர்ம நபர்கள் ஆசாத் சென்ற காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் லேசாக காயமடைந்த ஆசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

பட்டப்பகலில் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது ஒரு சாதியக் குற்றம். தேசத்தில் நடக்கும் சாதிய அநீதிகளுக்கு எதிராக வலுவான குரலைக் கொடுத்து வந்த அம்பேத்கர் சிந்தனைவாதி ஆசாத். குறிப்பாக தலித் சமூகத்தினர் அதிகமுள்ள உத்தரப் பிரதேசத்தில் அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து ஆசாத் தனது குரலைப் பதிவு செய்து வருகிறார். ஆசாத் ஓர் அரசியல் ஆளுமை. அவர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கிடப்பதென்பது அப்பட்டமான சாதியவாதம். மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்துள்ளதற்கான அடையாளம்.

உத்தரப் பிரதேச முதல்வர் இச்சம்பவத்தை முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டும். காவல் துறை ஆழமான விசாரணை நடத்த வேண்டும். சாதி வெறி பிடித்த துப்பாக்கி குண்டர்களை உடனடியாக போலீஸார் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், எனது சகோதரர் ஆசாத் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.