மத்திய அரசின் அவசர சட்ட நகலை எரிப்போம்: ஆம் ஆத்மி

ஜூலை 5ம் தேதி, 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் எரிக்கப்படும். மத்திய அரசின் நடவடிக்கையானது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் செயல் என ஆம் ஆத்மி கூறியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூலை 3ம் தேதி, மத்திய டெல்லியில் உள்ள அவரது ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற அவசர சட்டத்தின் நகலை எரிப்பார் என்று அக்கட்சி இன்று அறிவித்துள்ளது. செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும், டெல்லி அமைச்சருமான சௌரப் பரத்வாஜ் கூறியதாவது:-

கருப்பு அவசரச் சட்டம் மூலம் டெல்லியை சட்டவிரோத கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனை எதிர்த்து, ஜூலை 3ம் தேதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேபினட் அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்சி அலுவலகத்தில் கருப்பு அவசரச் சட்டத்தின் நகல்களை எரிக்க வேண்டும். பிறகு, ஜூலை 5ம் தேதி, 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் எரிக்கப்படும். அதற்கு பிறகு, ஜூலை 6 முதல் ஜூலை 13 வரை, டெல்லியின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் தீ வைத்து எரிக்கப்படும். கட்சியின் 7 துணைத்தலைவர்களும் டெல்லியின் ஒவ்வொரு பகுதியிலும் அவை எரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில், அக்கட்சியின் 7 துணைத் தலைவர்களான திலீப் பாண்டே, ஜர்னைல் சிங், குலாப் சிங், ஜிதேந்தர் தோமர், ரிதுராஜ் ஜா, ராஜேஷ் குப்தா மற்றும் குல்தீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.