மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மணிப்பூரில் உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ள ராகுல் காந்தி நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களை சந்தித்தது பற்றிய அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “அங்கே (நிவாரண முகாம்கள்) நான் பார்த்த ஒவ்வொரு சகோதரர், சகோதரி, குழந்தையின் முகத்திலும் உதவிக்கான கூக்குரல் ஒலிக்கிறது. மணிப்பூரின் இப்போதைய முக்கியத் தேவை அமைதி. மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மணிப்பூரில் உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும். நம் அனைவரின் முயற்சிகளும் அமைதியை நிலைநாட்டும் வகையில் ஒன்றிணைய வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் பயணமாக மணிப்பூர் மாநிலத்துக்கு நேற்று சென்றடைந்தார். பாதிக்கப்பட்ட மக்களை அகதிகள் முகாமில் சந்திக்க, சாலை மார்க்கமாக ராகுல் காந்தி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ராகுல் காந்தி வாகனத்தை போலீசார் மறுத்து சாலை மார்க்கமாக செல்ல தடை விதித்தனர். இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நீடித்தது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாகவும் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி சந்தித்து கலந்துரையாடினார். இதன்பின்னர் இம்பால் ஹோட்டல் ஒன்றில் 10 அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் இம்பாலில் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும். அமைதிதான் இங்கே தேவையான ஒன்றாக இருக்கிறது. மணிப்பூர் அகதிகள் முகாம்களை பார்வையிட்டேன். மக்களை சந்தித்தேன். அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றார்.
மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டன. இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனிடையே ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ராகுல் காந்தியால் மணிப்பூரில் அமைதியை கொண்டுவர முடியுமா? அரசியல் லாபத்துக்காக மட்டுமே ராகுல் காந்தி மணிப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடும் எனவும் பாஜக தலைவர்கள் விமர்சித்தும் வருகின்றனர்.