செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் விவகாரத்தில் ஆளுநர் ரவி தனது முடிவை வாபஸ் பெறவில்லை, நிறுத்தித் தான் வைத்துள்ளார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமலாக்கத்துறை வழக்கைச் சந்தித்துவரும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருப்பதாக நேற்று மாலை ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அமைச்சரை பதவிநீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை. இதனைச் சட்டப்படி சந்திப்போம்” என்று தெரிவித்தார். திமுக கூட்டணி கட்சிகளும் ஆளுநரின் நடவடிக்கைகளைக் கடுமையாக கண்டித்தன. இதையடுத்து, செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து அறிவித்த முடிவை நிறுத்தி வைக்க ஆளுநர் முடிவெடுத்தார். தொடர்ந்து, ஆளுநரிடமிருந்து முதலமைச்சருக்கு இன்னொரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில், முன்பு தான் எடுத்த முடிவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டு சில மணி நேரமே ஆன நிலையில், அந்த அறிவிப்பை ஆளுநர் திரும்பப் பெற்றது அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இன்று சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரை நீக்கம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தார் மு.க.ஸ்டாலின். தற்போது அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்கிறார். இது ஆளுநர் அதிகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. செந்தில் பாலாஜி ஊழல் செய்திருப்பதாக உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது.
செந்தில் பாலாஜி விவாகரத்தில் கடந்த இரண்டு வாரமாக முதல்வர், அவரை காப்பற்றுவதற்கான எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்? அமைச்சரவையை முதல்வர் சரியாக வைக்கவில்லை. அமைச்சருக்காக முதல்வர் வரம்பு மீறி செயல்பட்டு வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்குவதாக அறிக்கை விட்டிருந்தார். அதன் பிறகு நிறுத்தி வைத்தார். இதற்கு முதல்வர், அமைச்சர்கள் என பலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு தான் இந்த முடிவை ஆளுநர் எடுத்தார். எனவே, செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் விவகாரத்தில் ஆளுநர் வாபஸ் பெறவில்லை. நிறுத்தித் தான் வைத்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.