தமிழகத்தைப் பொறுத்தவரையில் அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது: ஜெயக்குமார்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போது நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து நேற்றிரவு அறிவிப்பைத் தமிழ்நாடு ஆளுநர் வெளியிட்டார். இருப்பினும், கொஞ்ச நேரத்திலேயே அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக மற்றொரு அறிவிப்பு வெளியானது. சில நாட்களாகச் செந்தில் பாலாஜி விவகாரம் அமைதியான நிலையில், மீண்டும் இப்போது அது பேசுபொருளானது. இதற்கிடையே இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் இதே ஸ்டாலின் தான். அப்போது அவர் என்ன கூறினார் என அனைவருக்கும் தெரியும். ஸ்டாலின் அப்போது பேசியதெல்லாம் இப்போதும் சமூக வலைத்தளங்களில் இருக்கிறது. செந்தில் பாலாஜி ஊழலில் திளைத்து வருகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றெல்லாம் சொல்லியவரே அவர் தான். இப்போது உச்ச நீதிமன்றமும் செந்தில் பாலாஜி மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றே கூறியுள்ளது. அதன் அடிப்படையில் தான் இப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் அரசியல் எல்லாம் எதுவும் இல்லை.

அமலாக்கத் துறை நடவடிக்கை என்பது உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இருக்கிறது. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்துவிட்டது. இப்போது அவர் நீதிமன்ற காவலில் தான் இருக்கிறார். அவருக்குக் கைதி எண் கூட கொடுத்துவிட்டனர். அப்படியிருக்கும் போது, ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் இருக்க முடியும். இது தான் எங்கள் அடிப்படை கேள்வி. இதன் அடிப்படையிலேயே நாங்கள் ஆளுநரிடம் மனு கொடுத்தோம். கடந்த காலங்களிலும் இதற்கான முன்னுதாரணங்கள் இருக்கிறது. கருணாநிதி ஆட்சியில் என்.கே.பி.ராஜா நீக்கப்பட்டுள்ளார். அதேபோல செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஒரு அமைச்சர் தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகாவைக் கவனிக்க தான் கார், பங்களா, ஊழியர்கள், பாதுகாவலர்கள் எனப் பல சலுகைகள் வழங்கப்படுகிறது. இலாகாவே ஒருவருக்கு இல்லை என்றால் அவர் எதற்காக அமைச்சராக இருக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தை ஏன் வீணாக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் மாநில அரசு ஒத்துழைக்கவில்லை. அப்படி இருக்கும் போது, அமைச்சராக இருப்பவர் எப்படி ஒத்துழைப்பார். அமைச்சர் என்ற பாதுகாப்பு கேடயத்தை வைத்து அவரை காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்கள் திட்டம். அவர் அமைச்சராக இருக்கும் வரை உரிய முறையில் விசாரணை நடக்காது. இதனால் பல உண்மைகள் வெளிவராமல் போய்விடும். இப்போது செந்தில் பாலாஜியை காப்பாற்றவே திமுக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதையெல்லாம் தாண்டி எளிமையான தார்மிக கேள்வி ஒன்று இருக்கிறது. இவ்வளவு தூரம் தாண்டி அவரை ஏன் இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருக்க வேண்டும். கிரிமினல் குற்றச்சாட்டு இருக்கும் அவர், இப்போது கைதியாக நீதிமன்ற காவலில் இருக்கிறார். இதனால் அவர் அமைச்சராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அதன் அடிப்படையிலேயே ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி பாலாஜி மீது நடவடிக்கை எடுப்போம் நீங்கள்தானே சொன்னீர்கள். இப்போது நடவடிக்கை எடுக்கிறார்கள். பாராட்டிவிட்டு போங்கள். அதனை விட்டுவிட்டு அன்றைக்கு ஒரு பேச்சு, இன்றைக்கு பேச்சு என்றால் நாட்டு மக்கள் கேட்டுக்கொண்டே இருக்க மாட்டார்கள். சட்டப்படி அமைச்சராக நீடிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை. தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இது 356 பிரிவை நோக்கித்தான் சென்றுகொண்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது. தனி மனிதர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பஞ்சாயத்து அனைத்தும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. உதாரணத்திற்குத் தர்மபுரியில் ஒரே நாளில் மூன்று கொலைகள். வடசென்னையிலும் நடக்கிறது. கண்ணியமாக இருந்த காவல்துறை மிரட்டப்படும் சூழ்நிலை உள்ளது. காவல்துறையினர் அரிவாளால் வெட்டப்படுவதும் நடக்கிறது.

மாமன்னன் திரைப்படம் இது ஒரு ப்ளாப் ஆன படம். அந்த படம் குறித்து அவர்கள் பாராட்டிக்கொள்வார்கள். ஐ.நா.சபையா பாராட்டிவிட்டது. திமுகவினர்தான் அந்த படத்தைப் பார்த்து வருகிறார்கள். பொதுமக்கள் யாரும் பார்ப்பது கிடையாது. சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்குத் தகுதி உள்ளதா. தனபாலைப் பேரவைத் தலைவராக ஜெயலலிதா நியமித்தார். அவரை எப்படி எல்லாம் கேவலப்படுத்தினார்கள். எப்படி எல்லாம் இம்சைப்படுத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.