கவர்னர் சர்வாதிகாரியாக செயல்பட தொடங்கி இருக்கிறார்: முத்தரசன்

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பாக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என முத்தரசன் கூறினார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய கவர்னர் ஆர்.என்.ரவி, முரண்பாடான கருத்துகளை கூறி சர்ச்சைகளை உருவாக்குவதில் தான் கவனம் செலுத்தி வருகிறார். சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் யாரை விரும்புகிறாரோ அவர்களை அமைச்சர்களாக்க அதிகாரம் உள்ளது என அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பாக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரத்தை கவர்னருக்கு யார் வழங்கியது?. இதன் மூலம் சட்ட நெருக்கடியை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் கவர்னர் ஈடுபடுகிறார். ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் பிரசார பீரங்கியாக செயல்பட்ட அவர் தற்போது சர்வாதிகாரியாக செயல்பட தொடங்கி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.