‘மாமன்னன்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் சூழலில் படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜூக்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட்ஜெயன்ட் நிறுவனம் மாரிசெல்வராஜூக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜூக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் கடந்த ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.