மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அஜித் பவார் துணை முதல்வராகவும், சக்கன் பூஜ்பால், திலீப் வால்ஸே பாட்டில், அதிதி டட்கரே, தனஞ்சய் முண்டே, ஹசன் முஷ்ரிஃப், ராம்ராஜே நிம்பல்கர், சஞ்சய் பான்ஸோடே, அனில் பாய்தாஸ் பட்டீல் ஆகியோர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை அஜித் பவார் ஆளுநரிடம் வழங்கினார். 9 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். துணை முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுடன் அஜித் பவார் பகிர்ந்து கொள்கிறார்.
இதையடுத்து அஜித் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களால் சிவசேனாவுடன் கூட்டணியில் இருக்க முடியும் என்றால் பாஜகவுடனும் கூட்டணியில் இருக்க இயலும்தானே. இது மாநிலத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. பிரதமர் நரேந்திர மோடி தேசத்தின் வளர்ச்சிக்காக உழைக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க இயலாது. அதனால் நான் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளேன். ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் நான் ராஜினாமா செய்துவிட்டேன்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்று திரள்வது பற்றி நிறைய ஆலோசனைகள் நடக்கின்றன. ஆனால் அதனால் விளைவு ஏதும் ஏற்படவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகளுக்கு ஒவ்வொரு நிலைப்பாடு இருப்பதே அதற்குக் காரணம். இந்தச் சூழலில் இதுவரை நான் எந்த எதிர்க்கட்சியிலும் பிரதமர் மோடியைப் போல் தேச நலனுக்காகப் போராடும் தலைவரைப் பார்க்கவில்லை. 1984-க்குப் பின்னர் இதுபோன்று தனித்து நின்று செயல்படும் தலைவரை நான் பார்க்கவில்லை. பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளாக அவ்வாறாக உழைத்து வருகிறார். வெளிநாட்டிலும் அவர் பிரபலமாக இருக்கிறார். இந்த வளர்ச்சியில் நாங்கள் இணைய விரும்புகிறோம். அதனால் இந்தக் கூட்டணியில் இணைந்து செயல்பட விரும்புகிறோம். எங்களை விமர்சிப்பவர்கள் குறித்து கவலை இல்லை. மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம். எங்களின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இதில் திருப்தி அடைகிறோம். தற்போதைய அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது. வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் இது குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “மகாராஷ்டிராவில் இரட்டை இன்ஜின் ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் நடந்துவரும் நிலையில் அஜித் பவார் வருகையால் இந்த ஆட்சிக்கு மூன்றாவது இன்ஜின் கிடைத்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக இந்த ஆட்சியில் இணைந்த அஜித் பவார் மற்றும் பிற தலைவர்களையும் வரவேற்கிறோம். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் அனுபவம் மாநிலத்தை மேலும் வலிமையாக்க உதவும்” என்றார்.
அமைச்சரவையில் பங்கீடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஷிண்டே, “இது குறித்து முடிவு செய்ய அவகாசம் இருக்கிறது. எதிர்க்கட்சி கடந்த மக்களவைத் தேர்தலிலாவது நான்கைந்து இடங்களைக் கைப்பற்றியது. இந்த முறை அதற்கும் வாய்ப்பில்லை” என்று கூறினார்.
இந்நிலையில் அஜித் பவாரின் அரசியல் நகர்வு குறித்து சிவ சேனா (உத்தவ் பால் தாக்கரே) பிரிவு எம்.பி. சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பக்கத்தில், “மராட்டிய அரசியலை ‘சுத்தப்படுத்தும்’ பணியை சிலர் கையில் எடுத்துள்ளனர், அவர்கள் வழிக்கு வரட்டும். நான் சரத் பவாருடன் இப்போதுதான் பேசினேன். அவர், தான் வலிமையாக இருப்பதாகக் கூறியுள்ளார். தங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்றும் உத்தவ் தாக்கரே மூலம் அனைத்தையும் மீண்டும் உருவாக்குவோம் என்றும் கூறியுள்ளார். இந்த விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.