காவிரி விவகாரத்தில் தமிழக பா.ஜ.க. நாடகம் ஆடுகிறது: கே.எஸ்.அழகிரி

காவிரி விவகாரத்தில் தமிழக பா.ஜ.க. நாடகம் ஆடுவதாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளதாவது:-

கர்நாடகத்தில் நடைபெறுகிற மோடிக்கு எதிரான கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டால், அவர் தமிழகத்தில் நுழைய முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சூளுரைத்திருக்கிறார். அவர் தமிழகத்தை உத்தரப்பிரதேசம் என்று நினைத்துக்கொண்டார் போலும். கர்நாடகத்தில் மேகதாது அணையை அவர்கள் கட்டினால், அதற்கு காரணம் காங்கிரசும், தி.மு.க.வும்தான் என்பதைப்போன்ற ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்கள். இதற்கு அடித்தளம் இட்டதே பா.ஜ.க.தான். உங்களுடைய முந்தைய மாநில அரசுதான், உங்களுடைய மத்திய அரசுதான்.

பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக இருந்தபோது மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்டத்தை டெல்லிக்கு எடுத்துச்சென்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் அதற்கான அனுமதியை பெற்றார். மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அப்படியொரு அனுமதியை கொடுக்கிறபோது, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஆலோசனையை கேட்கவேண்டும் என்பது விதி. தமிழகம், புதுச்சேரியிடம் கேட்டிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் கேட்காமல், தங்களுடைய அரசு மத்தியில் இருக்கிறது என்பதற்காக அந்த வரைவு திட்டத்துக்கு அனுமதி கொடுத்தார்கள். அதை வைத்துக்கொண்டுதான் பொம்மை அரசு, அந்த பணியை தொடங்க ஆரம்பித்தார்கள். எனவே இதற்கு காரணமே அவர்கள் தான்.

காவிரி பிரச்சினையை பொறுத்தவரை தமிழக அரசும், தமிழக காங்கிரசும் தெளிவாக இருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்கள் தௌிவாக இருக்கின்றன. மழைக்காலத்தில் எவ்வளவு தண்ணீர் தரவேண்டும்? மழை இல்லாத வறட்சி காலங்களில் எவ்வளவு தண்ணீர் தரவேண்டும்? தண்ணீரை வேறு இடத்தில் தேக்கி வைப்பது எந்த அளவுக்கு குற்றம்? என்பதை போன்ற எல்லா விஷயங்களையும் அவர்கள் தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். எனவே சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களை மீறி நமக்கு தண்ணீர் இல்லை என்று கர்நாடகம் சொல்ல முடியாது. சொல்வதற்கான வழியும் இல்லை. அப்படி அவர்கள் சொன்னால் விட்டுவிடுகிற மாநில அரசும் அல்ல இது. நமது மாநில அரசு உரிமைகளுக்காக போராடுகிறது. தமிழகத்தின் எல்லா உரிமைகளுக்காகவும் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பவர் முதல்-அமைச்சர். அவர்களுக்கு தோழமையாக இருக்கும் காங்கிரஸ் கட்சியும், மற்ற மதசார்பற்ற கட்சிகளும் மாநிலத்தின் உரிமைகளுக்காக நேர்மையாக போராடுவோம். வெறும் வாய்சொல் வீரர்கள் அல்ல. நாம் எந்த கருத்தையும் தெளிவாக எடுத்து வைப்போம். நீதிமன்றம் இருக்கிறது. இந்தியாவில் இறையாண்மை இருக்கிறது.

கர்நாடகத்தின் மந்திரி சொல்லிவிட்டார் என்றால், அது சட்டமாகாது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் தலைவர்கள் அல்ல. எனவே எங்களையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. தமிழக அரசையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. இங்கே (தமிழகத்தில்) இருக்கும் பா.ஜ.க. இதை வைத்து நாடகம் ஆடுகிறது. இதில் குற்றவாளிகளே பா.ஜ.க. தான். இதை தொடங்கி வைத்துவிட்டு மவுனமாக இருப்பது அவர்கள் தான். மற்றவர்கள் மீது குறை சொல்ல நீங்கள் முயற்சிக்கிறீர்கள். வரைவு திட்டத்துக்கு அங்கீகாரம் கொடுத்ததே மோடி அரசுதான். அந்த வரைவு திட்டத்தின் அங்கீகாரத்தை பெற்றவர்களே பொம்மை அரசு தான். எனவே அவர்களை பொம்மையை போல கவிழ வைப்போம் என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.