நாற்காலிகள் இருந்தும் அமர வைக்காமல் இருப்பதுதான் திராவிட மாடலா?: சீமான்

தம்மை சந்திக்க வந்த பரங்கிப்பேட்டை ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமிய பிரதிநிதிகளை, நாற்காலிகள் இருந்தும் அமர வைக்காமல் இருந்ததாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பில் வந்ததிலிருந்து, அமைச்சர்கள் சிலர் பேசும் விஷயங்கள் பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது. குறிப்பாக ‘ஓசி’ பஸ், சாதி பெயரை சொல்லி திட்டியது, டிஎஸ்பி பரவாசுதேவனுக்கு அமைச்சர் வழங்கிய பாராட்டு என தொடர்ந்து அமைச்சர்கள் பேசியவை பஞ்சாயத்துகளாக வெடித்தது. இந்நிலையில் சமீபத்தில் தம்மை சந்திக்க வந்த பரங்கிப்பேட்டை ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமிய பிரதிநிதிகளை, நாற்காலிகள் இருந்தும் அமர வைக்காமல் இருந்ததாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீது நாதக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சமூகநீதி காவலர்கள் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்ளும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம், தான் மட்டும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தம்மை சந்திக்க வந்த பரங்கிபேட்டை ஜமாத்தை சேர்ந்த இசுலாமிய பிரதிநிதிகளை நாற்காலிகள் இருந்தும் நிற்கவைத்தே பேசி அனுப்பியுள்ளார். இதுதான் திமுக கடைப்பிடிக்கும் சமத்துவமா?

இசுலாமியப் பெருமக்களை வெறும் வாக்கு வங்கிகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு திமுக ஏமாற்றப்போகிறது? இசுலாமியர்களின் வாக்கு வேண்டும், அவர்களுக்கான அடிப்படை உரிமை வேண்டாமா? நீண்டகால இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இசுலாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தையும் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் இசுலாமிய பிரதிநிதிகளை சமமாக உட்கார வைக்ககூட மனமில்லையா? “கடைப்பிடிக்கமுடியாத சூழ்நிலையிலும் கடைப்பிடிப்பதற்கு பெயர்தான் மாண்பு”. மக்களால் மாண்புமிகு அமைச்சர் என்று மரியாதையோடு அழைக்கப்படும் உயர்ந்த பொறுப்பினை வகிப்பவர் சக மனிதர்களை மரியாதையோடு நடத்தும் அடிப்படை மனித பண்புகூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் திராவிட மாடலா? இதுதான் ஐம்பதாண்டுகளாக தமிழ் மண்ணில் திமுக கட்டிக்காத்த சமூகநீதியா? இதுதான் திராவிடம் வளர்த்தெடுத்த சுயமரியாதையா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.