தமிழ்க் கட்டாயப் பாடச் சட்ட வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாதிட வலிமையான சட்ட வல்லுனரை பணி அமர்த்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கி சட்டம் இயற்றப்பட்டு, 17 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அது இன்னும் நடைமுறைக்கு வராதது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் எந்த நேரமும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதை வலிமையாக எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக வேண்டும். உலகில் எந்த நாட்டிலும், அதன் தாய்மொழியை கற்காமல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்ய முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காமல் பட்டப்படிப்பைக் கூட நிறைவு செய்ய முடியும் என்ற நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே, பா.ம.க. கொடுத்த அழுத்தத்தின் பயனாக மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 09.06.2006-ஆம் நாள் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
அச்சட்டத்தின்படி 2006-ஆம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு, 2007-ஆம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு என படிப்படியாக தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டு 2015-16ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த ஆண்டு வரை பத்தாம் வகுப்பில் தமிழைக் கட்டாயப் பாடமாக படித்த 8 பிரிவினர் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஓராண்டில் கூட பத்தாம் வகுப்பில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கவில்லை. இதற்கு அரசு தான் காரணம். தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2015-16ம் ஆண்டில் அச்சட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. தமிழக அரசின் சார்பில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்படாதது தான் தமிழ்மொழி வீழ்த்தப்பட்டதற்கு காரணமாகும்.
2006-ஆ-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஓவ்வொரு வகுப்புக்கு நீட்டிக்கப்பட்டு பத்தாவது ஆண்டில் தான் பத்தாம் வகுப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்புக்கு தமிழ்ப் பாடம் நீட்டிக்கப்படும் போது அந்த வகுப்பில் தமிழ் கற்பிக்கப்பட்டதற்கான சான்றிதழை பள்ளிகளின் நிர்வாகங்கள் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அது கட்டாயமாகும். அதன்படி முந்தைய 9 ஆண்டுகளும் தங்களது பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தைக் கற்றுக் கொடுத்ததாக அரசிடம் சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளிகள், பத்தாவது ஆண்டில் மட்டும் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடத்தை கற்பிக்க முடியவில்லை என்று கூறி விலக்கு கோரின. முந்தைய 9 ஆண்டுகளில் தமிழ் கற்பிக்க ஏற்படுத்தப்படிருந்த கட்டமைப்புகள் பத்தாம் ஆண்டில் மட்டும் மாயமானது எப்படி? என்ற வினாவை அரசு எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், அந்த வினாவை தமிழக அரசு எழுப்பத் தவறியதன் காரணமாகவே தொடர்ந்து எட்டாவது ஆண்டாக கடந்த ஆண்டும் தமிழைப் படிக்காமல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் காரணமாக, தமிழக அரசு வழங்கும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களின் பெயர்கள் அப்படியே அச்சிடப்படும் நிலையில், தமிழ் என்று இருக்க வேண்டிய இடத்தில் மட்டும் மொழிப்பாடம் என்று குறிப்பிடப்படுகிறது. அதைக் காண சகிக்கவில்லை.
நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இப்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்குச் சென்றுள்ளது. கோடை விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்த நேரமும் தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படக்கூடும். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தின் நியாயங்களையும், தேவைகளையும் நீதிபதிகளுக்கு உணர்த்தும் வகையில் வாதிடக் கூடிய திறமையான சட்ட வல்லுனரை தமிழக அரசு நியமிக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவுகளின்படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையையும் தமிழ் கட்டாயப் பாட சட்டம் பறிக்கவில்லை என்பதை உச்சநீதிமன்றத்திற்கு உணர்த்த வேண்டும். இச்சட்டம் இயற்றப்பட்ட போதே, அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த 2008-ஆம் ஆண்டில் விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதையும் கடந்து ”உள்ளூர் மொழியை கற்றுக்கொள்வது குழந்தைகளின் நலனுக்கு மிகவும் நல்லது. மாறாக உள்ளூர் மொழியை கற்பிக்க மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல” என்றும் உச்சநீதிமன்றம் அப்போது கருத்து தெரிவித்தது. அதை மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு நினைவூட்டி, தமிழுக்கு ஆதரவான தீர்ப்பைப் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளிலும் தமிழ்க் கட்டாயப்பாடம் என்பது பல பத்தாண்டுகளுக்கு முன்பே சாத்தியமாகியிருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்புகளையெல்லாம் இழந்து விட்ட தமிழகம், இப்போது கிடைத்துள்ள கடைசி வாய்ப்பையாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையில் வெற்றி பெற்று நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். இவாறு அவர் கூறியுள்ளார்.