அண்ணாமலை போட்டியிட்டால் அவரை டெபாசிட் இழக்க வைப்போம்: அமைச்சர் மனோ தங்கராஜ்

நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். அதோடு, அமைச்சர் மனோ தங்கராஜ் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த நிலையில், அண்ணாமலையின் விமர்சனத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். பொதுக்கூட்டங்களின் போதும், பேட்டிகளிலும் திமுகவிற்கு எதிராக அதிரடியான குற்றச்சாட்டுக்களை அண்ணாமலை முன்வைத்து வருகிறார். அந்த வகையில், நேற்று முன்தினம் நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் வழக்கம் போல திமுக கடுமையாக அட்டாக் செய்து பேசினார். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜையும் விமர்சித்து அண்ணாமலை பேசியிருந்தார். அண்ணாமலை பேசுகையில், “அமைச்சர் மனோ தங்கராஜ் வீடியோ கான்பரன்ஸ் நடத்தியதற்கு ரூ.2 கோடியே 52 லட்சம் கணக்கு காட்டியுள்ளார். அதன்பிறகு ஆவினுக்கு மாற்றினார்கள். ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்கிறார் அமைச்சர். ஆனால் அங்குள்ள குழந்தைகள் வெளியே வந்து நாங்கள் குழந்தைகள் இல்லையா? என்று கேட்டனர். புதிய நாடாளுமன்றம் கட்டிடம் முன் பிரதமர் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கியதை அமைச்சர் மனோ தங்கராஜ், மூச்சு இருக்கா? உயிர் இருக்கா? என கேட்டு விமர்சித்துள்ளார். அடுத்த தேர்தலில் அமைச்சர் மனோ தங்கராஜ் டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்றார் என்பதை மக்கள் கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.

இந்த நிலையில், குலசேகரத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மனோதங்கராஜ் அண்ணாமலையின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து பேசினார். இது குறித்து அமைச்சர் மனோதங்கராஜ் கூறுகையில், “பாஜக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு முடிந்து விட்டது. ஏழை இந்துக்களுக்கு கல்வி உதவித்தொகை கேட்டு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது போராட்டம் நடத்தினார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் முடிந்துவிட்டது. யாருக்காவது கொடுத்து இருக்கிறார்களா? பாஜக தலைவர் அண்ணாமலையின் உளறலுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டி போடட்டும். பத்திரிகையாளர்களும் அவரை போட்டியிட சொல்லுங்கள். அப்போது நாங்கள் யார் எனக் காட்டுகிறோம். அண்ணாமலைக்கு தேர்தலில் போட்டியிடும் தைரியம் உள்ளதா? அண்ணாமலை போட்டியிட்டால் அவரை டெபாசிட் இழக்க வைப்போம்” என காட்டமாக சாடினார்.