மக்களை கொச்சைப்படுத்துவதே திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது: அண்ணாமலை!

அமைச்சர் எ.வ.வேலு பேச்சைக் குறிப்பிட்டு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது என காட்டமாக விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ தளபதி, மதுரை மேயர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசிய விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்பட்டார். தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி எங்கள் பேருந்து என மக்கள் அழைக்கக் காரணமாக இருந்தவர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக குடிநீர் நல வாரியம் அமைத்துத் தந்தவர். கோவில் கருவறைக்குள் நம்மவர்களை நுழைய அனுமதிக்கவில்லை என்பதால் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தவர். ஆன்மீகத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி நமது ஆட்சி. நம்மை ஆன்மீகத்திற்கு எதிரானவர்களாக காட்டுவதற்கு எதிர்கட்சியினர் முயல்கின்றனர். ஆனால் அது நடக்காது. திராவிடத்தையும், ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது. திராவிடத்திற்குள் தான் ஆன்மிகம் இருக்கிறது. நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. காவி அணிந்தவர்கள் எல்லோரும் எங்கள் விரோதி அல்ல. காவி அணிந்து நல்லது செய்தால் அவர்களும் எங்கள் நண்பர்கள் தான்.

தென்மாவட்ட மக்கள், வழக்கு நடத்துவதற்கு அதிக பொருள் செலவு செய்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரவேண்டிய தேவை இருந்தது. மத்திய அரசிடம் போராடி, நாடாளுமன்றத்தில் நமது எம்.பிக்களை பேச வைத்து மதுரைக்கு உயர் நீதிமன்ற கிளையை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இன்று தென் தமிழக மக்கள் அதிக செலவு செய்யாமல் மதுரையில் வழக்கு நடத்த முடிகிறது என்றால் அது கருணாநிதி போட்ட பிச்சை. மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நடத்தும் ஆட்சி தான் கருணாநிதி ஆட்சி” எனப் பேசினார்.

மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை அமைந்தது கருணாநிதி போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு பேசியதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார். எ.வ.வேலு பேசிய வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. அண்னாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

“பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்றார் திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி. “சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை” என்கிறார் அமைச்சர் எ.வ. வேலு.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி, வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது. தொடர்ந்து பொதுமக்களை அவமானப்படுத்தி வரும் திமுகவினரின் இது போன்ற அகங்காரமான பேச்சுக்களை, தமிழ்நாடு பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.