சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு!

சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு. முன்னாள் முதல்வர் கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் பேசிய போது உணர்ச்சிவசப்பட்டு விட்டேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.

மதுரையில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசிய விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “தென்மாவட்ட மக்கள், வழக்கு நடத்துவதற்கு அதிக பொருட்செலவு செய்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரவேண்டியது இருந்தது. மத்திய அரசிடம் போராடி, நாடாளுமன்றத்தில் நமது எம்.பிக்களை பேச வைத்து மதுரைக்கு உயர் நீதிமன்ற கிளையை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இன்று தென் தமிழக மக்கள் அதிக செலவு செய்யாமல் மதுரையில் வழக்கு நடத்த முடிகிறது என்றால் அது கருணாநிதி போட்ட பிச்சை. மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நடத்தும் ஆட்சி தான் கருணாநிதி ஆட்சி” எனப் பேசினார்

அமைச்சரின் இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவிய நிலையில் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பிச்சை போடுகிறோம் என்று கூறி, வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது. திமுகவினரின் இது போன்ற அகங்காரமான பேச்சுக்களை, தமிழ்நாடு பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.” எனத் தெரிவித்தார். இதற்கிடையே, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் எவ வேலுவை தொடர்புகொண்டு எவ வேலுவை கண்டித்துள்ளார். தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டு பிரச்சனையை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் வேலுவை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். “பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தியது இன்று காலையில் ஒரு செய்தியில் பார்த்த பிறகு தான் தெரியவந்தது. அதன்பிறகு எனக்கு மன உளைச்சலே ஏற்பட்டு விட்டது. பொதுக்கூட்டத்தில் பேசிய தவறான வார்த்தைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். அந்த வார்த்தையை திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைந்தது கருணாநிதி போட்ட பிச்சை என்று பேசியதற்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். ஐகோர்ட் கிளை அமைந்தது கருணாநிதி அளித்த கொடை எனச் சொல்வதற்குப் பதிலாக உணர்ச்சிவசப்பட்டு தவறான வார்த்தையைப் பயன்படுத்தி விட்டேன். முன்னாள் முதல்வர் கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் பேசிய போது உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.