அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துகிறேன்: சீமான்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து வன்முறை நடந்து வரும் நிலையில் ‛‛நாட்டை என்னிடம் கொடுத்தால் வெறும் அரை மணிநேரத்தில் வன்முறையை நிறுத்தி காட்டுவேன்” என சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியக்குளம், போடி, கம்பம் சட்டசபை தொகதிகளில் கட்சியின் உள்கட்டமைப்பை சீமான் மறுசீராய்வு செய்தார். அதன்பிறகு மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடி, எதிர்வரும் தேர்தல்களை சந்திப்பதற்கு தயாராவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இந்த வேளையில் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சீமான் கூறியதாவது:-

மணிப்பூர் கலவரம் என்பது பிரதமர், அம்மாநில முதல்வருக்கு தெரியாமல் இல்லை. நேற்று காஷ்மீரில் என்ன நடந்ததோ, அதற்கு முன்பு என் ஈழத்தில் என்ன நடந்ததோ அதுதான் இன்று மணிப்பூரில் நடந்துள்ளது. இலங்கையில் சிங்களனை வைத்து அடித்து விரட்டினார்கள். காஷ்மீரில் ராணுவத்தை வைத்து மக்களை அடித்து விரட்டினார்கள். இப்போது மணிப்பூரிலும் அதேதான் நடக்கிறது. மணிப்பூர் மாநில பிரச்சனை என்பது பழங்குடியின மக்களை வெளியேற்றுவதை அடிப்படையாக கொண்டுள்ளது. காடுகளில் வாழும் பழங்குடியின மக்களை வெளியேற்றிவிட்டு கனிமவளங்களை எடுக்க வேண்டும். தற்போது பழங்குடியின மக்கள் கிறிஸ்தவர்களாக உள்ளனர். மைத்தேயி மக்கள் உயர்ஜாதி இந்துக்களாக உள்ளனர். இதனால் இருவருக்கும் மோதலை உருவாக்கி பழங்குடியினர்களை வெளியேற்றி இயற்கை வளத்தை சுரண்ட உள்ளனர். நீங்க என்கிட்ட நாட்டை கொடுத்தால் அரைமணி நேரத்தில் கலவரத்தை நிறுத்துறேன்.. முடியுமா? முடியாதா?. சாதாரண குழந்தைகளிடம் கேட்டால் கூட இது அரசியல் என்பது தெரியும்

இந்தியா விடுதலையாகி 75 ஆண்டுகள் ஆகவிட்டது. தற்போது இருக்கும் சட்டத்தால் எந்த பிரச்சனையாவது வந்துள்ளதா? அமைதி இறையாண்மை, தேச ஒற்றுமை என எதற்காவது பிரச்சனை இருக்கிறதா?. எதுவும் இல்லை. இத்தகைய சூழலில் பொது சிவில் சட்டம் தேவையா?. நாட்டில் கல்வி, மருத்துவம், மின்உற்பத்தி, சாலைபோடுதல், தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தலாம். ஆனால் அதனை விட்டுவிட்டு ஒரே சட்டம், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே ரோடுனு கவனம் செலுத்துறாங்க. எங்காவது ஒரே சுடுகாடு இருக்கிறதா? ஒரே குளம் இருக்கிறதா? ஒரே கோவில் உள்ளதா?.

உங்களுக்கும் சிவன், எனக்கும் சிவன். ஆனால் நீங்கள் பூரி ஜெகன்நாதர் கோவிலில் நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரை உள்ளே விடவில்லை. அதேபோல் இப்போது டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவின்போது குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை விடவில்லை. இத்தகைய சூழலில் பொது சிவில் சட்டத்தால் நாட்டுக்கு என்ன பயன்?. மேலும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வந்துள்ள நிலையில் எப்படி பொது சிவில் சட்டம் மூலம் பொருளாதார ஏற்றத்தாழ்வு நீக்கப்படும். இன்று ஏழையாக இருக்கும் சீமான் நாளை அதானி, அம்பானி ஆகிவிடலாம். ஆனால் இன்று பறையராக இருக்கும் சீமான் ஒருநாளும் உயர்ஜாதிக்காரராக மாற முடியாது. உலகத்தில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவன் தான் என்ற நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.