பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என ஜார்க்கண்ட் ஆளுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவை வந்தார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர் . பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் தமிழர்கள் மீதும், தமிழகம் மீதும் மகத்தான நம்பிக்கை வைத்திருக்கிறார், அதனால் தான் 3 தமிழர்கள் 4 மாநிலங்களில் ஆளுநர்களாக இருக்கின்றனர். ஆளுநர்களின் செயல்பாடுகள் மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளை பொறுத்து அமைந்துள்ளது. ஆளுநர் என்பவர் ஏதோ அதிகாரம் செய்ய வந்ததாக கருதக்கூடாது, அவர் அரசியல் சட்டத்தின்படி மாநில அரசு செயல்படுவதை உறுதிப்படுத்துகின்றார்.
மணிப்பூரை பொறுத்தவரை ஒரு வழக்கில் தீர்ப்பு வந்தது, அதில் இரு பிரிவுகளுக்கு இடையே பகை இருந்த நிலையில் அது மீண்டும் மேலே வந்திருக்கிறது. கலவரங்கள் நடைபெற்று வருகிறது, இப்பொழுது படிப்படியாக கலவரம் கட்டுப்படுத்தபட்டு வருகின்றது. கலவரத்தை கட்டுப்படுத்துவது எளிதாக இல்லை, அதை அரசியலாக்காமல் அமைதியை ஏற்படுத்த வேண்டும். பொது சிவில் சட்டம் அனைவருக்கும் பொதுவான சட்டம். இதை அனைவரும் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.