தமிழ்நாட்டில் 55 சார்பதிவாளர்களும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு உள்ளனர். இதில் சென்னையில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும் சட்டவிதிகளை மீறி பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருவதாகவும் பல்வேறு குற்றச்சாடுகள் எழுந்து வந்ததன. இந்த நிலையில் சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.2000 கோடி கணக்கில் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 17 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான தொகை கணக்கில் காட்டப்படவில்லை என்றும், 400 பத்திரப்பதிவுகள் குறித்து எந்த தகவலும் இல்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். ஆய்வை தொடர்ந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
வட சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்ட பறக்கும் இடமாக செங்குன்றம் உள்ளது. இங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் அதிகளவில் பத்திரப்பதிவும் நடைபெற்று வந்தது. சார்பதிவாளர்கள் அலுவலங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து தமிழ்நாட்டில் 55 சார்பதிவாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்கள். தமிழ்நாட்டில் ஏற்கனவே 36 மாவட்டங்களின் சார்பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் மேலும் பலரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார் அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி. இதில் குறிப்பாக சென்னையில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களுமே வெவ்வேறு இடங்களுக்கு அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டு உள்ளார்கள். நிர்வாக காரணங்களுக்காக இந்த இடமாற்றம் நடந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.