செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்த நிலையில், 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சி.வி.கார்த்திகேயன் இன்று விசாரணையைத் தொடங்குகிறார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, தனியார் மருத்துவமனையில் பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அதே மருத்துவமனையில் அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி மேகலா, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தனர். ‘செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டவிரோதம் என்பதால், அவரை உடனே விடுவிக்க வேண்டும்’ என்று நீதிபதி ஜெ.நிஷாபானுவும், ‘செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்திருப்பது சட்டரீதியாக சரியான நடைமுறைதான்’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி டி.பரத சக்ரவர்த்தியும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால், இந்த வழக்கில் ஒரு வார காலத்தில் 3-வது நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா உத்தரவிட்டார். நீதிபதி கார்த்திகேயன் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணையை தொடங்குகிறார். மாறுபட்ட 2 தீர்ப்புகளில் எது சரி என்பதை, விசாரணைக்குப் பிறகு அவர் உறுதி செய்வார். செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி மனைவி தரப்பு அதிரடியான வாதங்களை எடுத்து வைத்த நிலையில் 2 நீதிபதிகளும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால் இன்று நடைபெறும் 3வது நீதிபதியின் விசாரணை அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.