பழங்குடியின இளைஞரின் காலை கழுவி மன்னிப்பு கேட்ட ம.பி முதல்வர் சிவராஜ் சிங்!

மத்திய பிரதேசத்தில், பாஜகவைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரை தனது வீட்டுக்கு அழைத்து காலை கழுவி மன்னிப்புக் கேட்டார் ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.

மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள குப்ரி கிராமத்தில் பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா, போதையில் பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் முகத்தில் சிறுநீர் கழித்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டுத்தீயாகப் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதும் அவர் பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லாவின் பிரதிநிதியாகப் பணியாற்றி வருபவர் என்றும், பிற பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. எதிர்கட்சினர் பழங்குடியினரை அவமதித்தது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்தனர்

பழங்குடியினரின் நலன்களைப் பற்றி பொய்யாகப் பேசும் பாஜகவின் தலைவர்களில் ஒருவர், பழங்குடியின ஏழை இளைஞர் ஒருவரை இப்படிக் கொச்சைப்படுத்துகிறார். இதுமிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். காங்கிரஸ் தலைவர் கமல்நாத், “இத்தகைய கேவலமான செயலுக்கு நாகரிக சமுதாயத்தில் இடமில்லை. குற்றவாளிக்கு பாஜகவுடன் தொடர்பு உள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த மத்திய பிரதேசத்தையே அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டானதை அடுத்து, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவித்தார். முதலமைச்சரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி பிரவேஷ் சுக்லாவை கைது செய்தனர். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்.சி எஸ்.டி வன்கொடுமைச் சட்டம் பாய்ந்தது. அதன்பின் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த அவரது வீட்டையும் அதிகாரிகள் புல்டோசர்கள் மூலம் இடித்தனர்.

இந்த நிலையில் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரை போபாலில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவரின் காலை கழுவினார். பின்னர் அவருக்கு மாலை சூட்டி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இனிப்பு ஊட்டியதோடு, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரிடம் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், “அந்த வீடியோவைப் பார்த்து நான் வேதனைப்பட்டேன். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் எனக்கு கடவுள் போன்றவர்கள்” என்றார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.