கர்நாடகாவில் பெண் விவசாயி நேற்று தனது பண்ணையில் இருந்து ரூ 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தக்காளியின் விளைச்சல் மற்றும் வரத்து காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. தக்காளியை பதுக்கி வைக்கக் கூடாது என மத்திய , மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடகாவில் பெண் விவசாயியின் பண்ணையில் இருந்து ரூ 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டதாக புகார் கூறியுள்ளார். கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தின் பேலூர் தாலுக்காவிற்குள்பட்ட கோனி சோமனஹள்ளி கிராமத்தில் பெண் விவசாயி தாரணியின் விவசாய வயலில் இருந்து 50 முதல் 60 தக்காளி மூட்டைகளை யாரோ திருடி சென்றுவிட்டனராம். இந்த நிலையில் தாரணி மற்றும் அவரது குடும்பத்தினர் இரு ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டு அடுத்த வாரம் விளைச்சலை சந்தைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் இப்படி தக்காளிகள் திருடு போய்விட்டன. இதனால் அந்த குடும்பத்தினர் கலங்கி போயுள்ளனர். கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் அறுவடையில் வரும் பணத்தில் கடனை அடைக்கலாம் என நினைத்திருந்தனர். ஆனால் அவர்களின் போதாத காலம் இப்படி ஆகிவிட்டது.
இதுகுறித்து தாரணி கூறுகையில், பருப்பு அறுவடையின் போது பெரு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடன் வாங்கி தக்காளி பயிரிட்டோம். நல்ல விளைச்சல் இருந்தது. தற்போது தக்காளியின் விலையும் உயர்ந்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தோம். இந்த நிலையில் 50 முதல் 60 மூட்டைகளை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். அது மட்டுமல்லாமல் இருந்த பயிரையும் அழித்துவிட்டனர் என கூறியுள்ளார். இது குறித்து தாரணி அளித்த புகாரின் பேரில் ஹளேபீடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஹளேபீடு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மற்ற வணிக பொருட்களை திருடிச் சென்றதாக நிறைய புகார்கள் வந்திருந்தன. அதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினோம். ஆனால் தக்காளியை திருடியதாக நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. இது போன்று எங்கள் காவல் நிலையத்திற்கு புகார் வந்து வழக்குப் பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை என தெரிவித்திருந்தார். தற்போது தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ 101 முதல் ரூ 121 வரை செய்யப்படுகிறது. தக்காளி பயிர்களில் பூச்சி தாக்குதல்களால் விளைச்சல் குறைந்துள்ளதாக கூறுகிறார்கள். இதுதான் அதிக சந்தை விலைக்கு வழி வகை செய்ததாகவும் தெரிகிறது. கர்நாடகாவில் மட்டுமல்லாமல் இதர மாநிலங்களிலும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ 120 முதல் ரூ 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்திற்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் தக்காளி வரும். தற்போது விளைச்சல் குறைந்து வருவதால் வரத்து குறைந்துள்ளது. இதனாலும் தக்காளி விலை அதிகரித்துள்ளது.