மத்திய பிரதேசத்திற்குச் சென்றாலும் கூட பிரதமர் மோடிக்கு நமது திமுக தான் ஞாபகத்திற்கு வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற துர்கா ஸ்டாலினின் சகோதரர் ஜெய.ராஜமூர்த்தி இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் பேசிய ஸ்டாலின், பிரதமர் மோடியையும், பாஜக அரசையும், ஆளுநர் ஆர்.என்.ரவியையும் கடுமயாக விமர்சித்தார். முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
இன்றைக்கு வள்ளலார் குறித்து ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதாவது உளறிக் கொண்டிருக்கிறார். அவர் யார் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டை பொருத்தவரை திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறதோ, தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளை எல்லாம் எப்படி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதோ அதே போல் இந்திய நாட்டிற்கு ஒரு ஆட்சியும் தேவை. மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மதம், சனாதனம் பற்றி மக்களிடையே திணித்து ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் கூட பொது சிவில் சட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளனர். நாட்டில் ஏற்கெனவே சிவில் சட்டம், கிரிமினல் சட்டங்கள் இருக்கின்றன. அதை நீக்கிவிட்டு, பாஜகவை எதிர்க்க கூடியவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று நோக்கத்தில், மக்களுக்கு துன்பங்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் இதை செய்கின்றனர். ஏற்கெனவே அரசியல்வாதிகளில் அவர்களை எதிர்க்க கூடியவர்களை, சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை வைத்துக் கொண்டு மிரட்டும் ஆட்சி மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது.
திமுக என்பது குடும்ப கட்சி என பிரதமர் மோடி விமர்சனம் செய்கிறார். நாம் இங்கு குடும்பமாக இருப்பதை கேட்டால் பிரதமருக்கு கோபம் வந்துவிடும். தமிழ்நாடு மட்டுமல்ல மத்திய பிரதேசம் சென்றாலும் பிரதமருக்கு நமது ஞாபகம் தான் வருகிறது. அண்ணாவால் தொடங்கப்பட்டு கருணாநிதியால் வளர்க்கப்பட்ட திமுக குடும்ப கட்சி தான். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடே எங்கள் குடும்பம் தான். இவ்வாறு அவர் பேசினார்.