பரந்தூர் விமான நிலையம்: மக்களின் எதிர்ப்பு காரணமாக மாற்றுவழியில் சென்று அதிகாரிகள் ஆய்வு!

பரந்தூர் விமான நிலையத்துக்கு, கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக, ஆய்வுக் குழுவினர் மாற்று வழியில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் உள்ள சுற்று வட்டார பகுதியிலுள்ள 13 கிராமங்களை ஒன்றிணைந்து 4791 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 346 வது நாளாக பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு விமான நிலையம் அமைக்க உள்ள இடத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க பேராசிரியர் மச்சநாதன் தலைமையில் ஐஐடி குழு அமைக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க உள்ள இடத்தில் கள ஆய்வு மேற்கொள்ள வரும் போராசிரியர் மச்சநாதன் ஆய்வு குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு புறம் உண்ணாவிரதபோராட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி மாற்று பாதையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் சென்று பேராசிரியர் மச்சநாதன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டனர். விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய், மேல்பொடவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏகனாபுரம் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆய்வு குழுவினர் ஆய்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.