பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினர்கள். அப்படி ஏதும் உண்மை அல்ல என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
மதுரைக்கு இன்று வருகை தந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மனித உரிமை மீறல்கள் நிறைய நடக்கின்றன. இந்தக் கலவரங்களுக்குப் பின்னணியில் சீன ஆதரவும் உள்ளது. பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்று பார்க்கவில்லை; அவர் உடனே சென்று இப்பிரச்சினையை சரிசெய்ய முயற்சி வேண்டும்.
பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தைப் பொறுத்தவரையில், அனைவரும் சேர்ந்து வந்தால் வெற்றிபெற வாய்ப்புள்ளது. நரேந்திர மோடி பிரதமராக இருந்த காலத்தில் எதுவும் செய்யவில்லை. நமக்கு ஓட்டுப் போடும் இந்துத்துவாவுக்கு மறுமலர்ச்சி கொண்டுவர முயற்சிகள் செய்தோம். அனைத்து இந்துக்களையும் ஒற்றுமையாக்க முயற்சி செய்தோம். இந்து ஒற்றுமை முயற்சிகளுக்காகத்தான் பாஜகவுக்கு ஓட்டு கிடைத்தது. மற்றபடி பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினார்கள். அப்படி ஏதும் உண்மை அல்ல. மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள்.
வெள்ளைக்காரர்கள், முஸ்லிம்கள் நமது கலாச்சாரத்தை கெடுத்து விட்டுச் சென்றனர். அதை மீட்பதற்கு மறுமலர்ச்சியை, ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என இந்துக்களிடம் எண்ணம் வந்துள்ளது. அதற்காக நமக்கு ஓட்டு கிடைக்கும்.
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் பற்றி கேட்கிறீர்கள். தேவர் என்பதைத் தவிர முத்துராமலிங்கத் தேவர் நாட்டின் விடுதலைக்காக போராடியவர். ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். மதுரை விமான நிலையத்துக்கு அவர் பெயர் வைக்காததில் எனக்கு மிகவும் வருத்தம். இன்று ஆட்சியில் யார் இருந்தாலும் அதற்கு ஆதரவு தரவில்லை. திமுக, அதிமுக யாரும் அதை ஆதரிக்கவில்லை. இவர்கள் கடிதம் கொடுத்தால் நாடாளுமன்றத்தில் பேசி மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க ஏற்பாடு செய்வேன். இரு கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் பொறாமையில் பேசி செயல்படுகின்றனர்.
பொது சிவில் சட்டத்தை எதிர்க்க காங்கிரஸ் கட்சியிடம் ஒன்றுமே இல்லை. சர்தார் பட்டேல், ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் காலம் காலமாக பொது சிவில் சட்டம் வேண்டாம் என கூறி வந்தனர். பொது சிவில் சட்டம் வந்துதான் ஆக வேண்டும். நம் நாட்டில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக உள்ளனர். ஒருவருக்கு 4 மனைவிகள் இருக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறைந்து வருகிறது என்பது கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதில் இருந்தே தெரிகிறது. பிரதமர் மோடி சும்மா அது பண்ண வேண்டும் இது பண்ண வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம்.
தமிழகத்தில் இரு ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ள திமுகவுக்கு முன்னேற்ற பாதையில் செல்ல விருப்பமில்லை. வெள்ளைக்காரர்கள் கொடுத்த வரலாற்றையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கோயில்களில் உள்ள வசதிகளை அழித்து வருகிறார்கள். இதுதான் திமுகவின் தில்லுமுல்லுத்தனம். மாமன்னன் குறித்து கேட்கிறீர்களா, திமுகவுக்கு சினிமாவை தவிர வேறு ஒன்றுமே தெரியாது. வரும் தேர்தலில் திமுக கட்டாயம் தோல்வி அடையும். அண்ணாமலையின் செயல்பாடு எப்படி இருக்கு, ஆமா அண்ணாமலை யாரு, தமிழகத்தில் பாஜக இருக்கா, எனக்கு அதை பற்றி எதுவுமே தெரியாதே, தமிழகத்தில் நான் பாஜகவை பார்த்தது கூட கிடையாது. இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி கூறினார்.